பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொன்னவண்ணம் செய்தபெருமாள்

19

செய்து விடுகின்றதென்றால், அதன் பெருமையை யார்தான் அளவிடமுடியும்?

இத்தலம் தாகம் தணிக்கும் சிறந்த இடம் என்பதைக் காட்டவே பாசுரத்தில் ‘அம்பூ தேன் இளஞ்சோலை’ எனக் குறிப்பிடப்பெற்றது. ‘எப்பாலைக்கும்’ என்பதில் ‘பாலை’ என்பது இலக்கணையாய் துன்பத்தை குறித்தது. அன்றியும், ‘பான்மை’ என்னும் பண்புப் பெயர் ‘மை’ விகுதியை இழந்து ‘ஐ’ விகுதி பெற்றுப் ‘பாலை’ என நின்று ‘எந்த நிலைமைக்கும்’ என்று பொருள்படுவதாகவும் உரைக்கலாம். ‘எப்பாலைக்கும் சேமத்ததே’ என்ற விடத்து நம்பிள்ளை ஈடு: ‘எல்லாப் பாலை நிலங்களால் வந்த வெம்மையையும் போக்கி நமக்கு இரட்சக முகமான தேசங்காண் அது (வெஃகா); இந்தப் பாலை நிலமே யன்றிக்கே இன்னமும் சில பாலைவனமும் கடக்கலாங்காண் இந்நில முண்டாக”.

இப்பாசுரத்திற்கு உள்ளுறைப் பொருளும் உண்டு. ஆழ்வார் கொடிய சம்சாரத்தைக் கழித்த தன்மையையும், எம்பெருமான் உகந்தருளின நிலத்தின் பரம போக்கியதையையும் அவர்களுக்குப் பாகவதர்கள் எடுத்துக்கூறி அவரது ஆற்றாமையைத் தவிர்த்தலே இதன் உள்ளுறை. முதல் இரண்டடிகள் ஒளிவடிவான எம்பெருமானின் பலவகை நிலங்களையும் திருவுள்ளத்திற் கொண்டு ஆய்ந்து அவற்றில் சத்தற்றது என்று கழித்ததும் பசையற்றதும் வெப்பம் மிக்கதுமான சம்சாரத்தைக் கடந்து மிக்க ஒளிபெற்றவரே! என்று பாகவதர்கள் ஆழ்வாரை விளிக்கின்றதைக் காட்டுகின்றன. பின்னிரண்டடிகள், மீளா உலகத்தவரான நித்தியசூரிகளும் மீண்டுவந்து வசிக்கும் படியான பெருமையுள்ள அர்ச்சாவதாரத் தலம் மிக அண்மையிலுள்ளதாய், மிகவும் இனிமை தருவதாய், எவ்வகைத் துன்பங்களையும் தவிர்ப்பதாய், நன்மைகட்கெல்லாம் புகலிடமாய் உள்ளது என்பதைக் காட்டி நிற்கின்றன. இந்த எண்ணங்கள் நம் மனத்தில் அலைபாய்ந்த வண்ணம் “யதோக்தகாரீ”[1] என்றும், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்றும் வழங்கப்பெறும் எம்பெருமான் கோயில் கொண்டிருக்கும் திருவெஃகாவினை அடைகின்றோம்.

  1. யதோக்த-சொன்ன வண்ணம்; காரீ.செய்பவர்.