பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

“வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும்-நான் கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்.”[1]

(வேங்கடம்-திருமலை; விண்ணகர்-பரமபதம்; அஃகாத மாறாத; கிடங்கு-நீர்

நிலை; கோவல்-திருக்கோவலுர் என்றால்-அநுசந்தித்தால்; இடர்-துக்கங்கள்)

என்ற பாசுரம் நினைவிற்குவர, அதனையும் அநுசந்திக்கின்றோம். எம்பெருமான் திவ்விய தேசங்களில் நிற்பதும், இருப்பதும், கிடப்பதும், நடப்பதுமான நிலைகளை நாம் சிந்தித்தால் நாம் நின்றும், இருந்தும், கிடந்தும் நடந்தும் செய்த பாவங்கள் யாவும் ‘தீயினுள் துரசாகும்’ என்ற உணர்ச்சி வயத்தராகின்றோம். இந்நிலையில் திருமழிசைப் பிரானின் திருப்பாசுரமும் நம் சிந்தையில் எழுகின்றது.

“நின்ற தெந்தை ஊரகத்து
இருந்த தெந்தை பாடகத்து
அன்று வெஃக ணைக்கிடந்தது
என்னி லாத முன்னெலாம்
அன்று நான்பி றந்திலேன்
பிறந்தபின் மறந்தி லேன்
நின்றதும் இருந்ததும்கி
டந்த தும்என் நெஞ்சுளே”.[2]

(ஊரகம்-உலகளந்த பெருமாள் சந்நிதி; டாடகம்- பாண்டவதுதர் சந்நிதி; என்

இலாத-நான் பிறவாத முன்பு)

என்ற அப்பாசுரத்தையும் அநுசந்திக்கின்றோம். இத்தலத்து உற்சவமூர்த்தி அழகெல்லாம் திரண்டு அமைந்த பேரழகு மிக்கது. ஐம்பொன் கலப்பில் பொன் சற்று அதிகமாக இருப்பதால் பேரொளியுடன் திகழ்வதாகக் கருதப்பெறுகின்றது.

  1. முத.திருவந்-77
  2. திருச். விருத்-64.