பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅட்டபுயகரத்து எம்மான் 27

பேசவேண்டும் என்பது ஆழ்வார்களின் திருவுள்ளமாதலின் ‘அட்டபுயன்’ என்று எம்பெருமானை வழங்காமல் ‘அட்டபுயகரத்தான்’ என்று வழங்கினர் என்பது ஆன்றோர் கொண்ட கருத்து. இந்த சொல்லாராய்ச்சியில் ஈடுபட்ட வண்ணம் திருக்கோயிலின் வாயிலை அடைகின்றோம். ‘அட்டபுயகரத் தான் திருவடிகளே சரணம்’ என்ற எண்ணத்துடன் வருவதால் பேயாழ்வாரின் பாசுரம் நம் சிந்தையில் குமிழியிட்டு எழுகின்றது.

‘தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக் கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான் தாள்முதலே தங்கட்குச் சார்வு’

(தொட்ட-ஏந்தின; தோலாத-தோல்வியடையாத, வென்றியான்-சயசீலன்; குட்டத்து-நீர்ப பொய்கையில், துஞ்ச-இறக்க: குறித்து எறிந்த-இலக்குத் தப்பாமல் விட்ட தாள்முதல்-பாத முதல்; சார்வு-அடையத்தக்க பொருள்)

என்பது பாசுரம் இப்படைகளைத் தரிக்குமிடத்துச் சிறிதும் சிரமமின்றி பூவேந்தினாற்போல் ஏந்தியிருப்பது தோன்ற ‘தொட்ட’ என்று குறிப்பிட்டுள்ளதைப் போற்றுகின்றோம். எட்டுப் படை என்பது வாளி, வில், கதை, திருச்சங்கு, வாள், திருவாழி, கேடயம், மலர் ஆகிய எட்டுத் திவ்வியாயுதங்களைக் குறித்தது. ஐம்பொறிகளாகின்ற பல முதலைகளின் வாயிலே அகப்பட்டுத் துடிக்கின்ற நம்மைக் காத்தருள்வதற்காகவே எம்பெருமான் திருவட்டபுயகரத்தில் எழுந்தருளியுள்ளான் என்பது குறிப்பு. ஆழ்வார் கூறும் தஞ்சவுணர்வு நம்மையும் பற்றுகின்றது; அந்த எம்பெருமானைச் சரண் அடையச் சித்தமாகின்றோம். இந்த உணர்வுடன் திருக்கோயிலுக்குள் நுழைகின்றோம்.

அட்டபுயகரத்து எம்மானைப் பேயாழ்வார், திருமங்கை யாழ்வார் ஆகிய இருவரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். ‘எண் கையான்’ என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடும் எம்பெருமான் அட்டபுயகரத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமானே என்பது ஆன்றோர் கொள்கை. பெரிய திருமடலிலும் இந்த ஆழ்வார் இந்த எம்பெருமானை

2. மூன்.திருவந்-99. 3. பெரி. திரு.1 8, 5