பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

‘மின்இலங்கு திருவுருவும், பெரிய தோளும்,

கரிமுனிந்த கைத்தலமும், கண்ணும், வாயும்,

தன்அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே

தாழ்ந்துஇலங்கு மகரம்சேர் குழையும் காட்டி’

(கரி-குவலயாபீடம் என்ற யானை)

நிற்கும் எம்பெருமானை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அறிந்துகொள்ளாமல் இருக்கவும் மனம் வரவில்லை. சொந்த அறிவு அவளது ஆராய்ச்சிக்குத் துணை செய்யவில்லை. யார் என்று வினவவும் வாய் செயற்படவில்லை. அவர் திருமுகத்தை நேரே பார்த்துப் பேச முடியாதபடி சோதி வெள்ளம் அலையெறிந்து தள்ளுகின்றது. அதனால் முகம் நோக்கி வாய் எழும்ப முடியாத நிலை ஏற்பட்டுவிடுகின்றது அவளுக்கு. ‘இவர் நம் தலைவராகவே இருத்தல் கூடும்’ என்று நெஞ்சிலே ஒர் எண்ணமும் தோன்றினமையால் வினவ முடியாத நாணம் இவளை ஆட்கொண்டு விடுகின்றது. இன்னாரெனத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவோ அதிகரித்துவிடுகின்றது. இந்நிலையில் அருகிலிருக்கும் வேறொருவரை நோக்கி ‘இப்பெரியார் யார்?’ என்று வினவுகின்றாள். அதற்கு எம்பெருமானே ‘நான் அட்டபுயகரத்தேன்’ என்று மறுமொழி கூறுகின்றான். எம்பெருமானே வினாடிக்கு வினாடி தன் திருக்கோலத்தை மாற்றி மாற்றிக் காட்சி அருள்கின்றான். அதனால் இவளுடைய வினாவும் மாறி மாறித் தொடுக்கப் பெறுகின்றது. எல்லா வினாக்கட்கும் எம்பெருமானே ‘நான் அட்டபுயகரத் தேன்’ என்றே விடைதருகின்றான்.

படுக்கையறையில் இங்ஙனம் பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பது தாய்மார் தோழிமார் செவியில் படுகின்றது. உடனே அவர்கள் பரகால நாயகியின் பள்ளியறைக்கு விரைந்து வந்து ‘நங்காய், ஏதாவது மன மயக்கம் ஏற்பட்டதா? இவை என்ன பேச்சுக்கள்?’ என்று வினவுகின்றனர். ‘ஒன்றும் மனமயக்கம் இல்லை. ஒரு பேரருளாளரைச் சேவிக்கப் பெற்றேன்; இவர் யார்?’ என்று வினவினேன். அட்டபுயகரத்து எம்மான் ‘நான் தான்; அட்டபுயகரத்தேன்’ என்று மறுமொழி

7. திருநெடுந்-25. 8. பெரி.திரு - 2.8 :1