பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

வருகின்றது. இதனைக் கட்டுவித்தவன் பல்லவ மன்னன் பரமேசுவர வர்மன் என்பவன். இவனுடைய தந்தை இராஜசிம்மன் என்பவனே காஞ்சிக் கைலாசநாதர் கோயிலை நிறுவியவன். இரண்டு கோயில்களும் சிற்பக்கலைக்குப் பெயர் போனவை. பல்லவமன்னர்களின் வரலாற்றுப் பரம்பரையை ஆராய விரும்புபவர் இரண்டு கோயில்களிலும் கல்லிலே உருவாகியிருக்கும் வரலாற்றினை எளிதாக அறிந்துகொள்ளலாம். தீப்பேற்றின் காரணமாக இந்த இரண்டு கோயில்களும் மைய அரசின் ஆதரவில் ‘நீலப் பலகையின் பாதுகாப்பில்’ உள்ளதை எண்ணி வருந்துகின்றோம். தந்தை சிவபக்தன்; மகன் திருமால் அடியான். இங்ஙனம் தந்தையிடமும் மகனிடமும் நிலைத்து நின்ற சமரச மனநிலையை மெச்சுகின்றோம். வயிரமேகனின் இந்த உயர்ந்த திருமால்பக்தியைப் போற்றும் முறையில் திருமங்கையாழ்வார் பாசுரந்தோறும் ஒருமுறைக்குப் பன்முறை அம்மன்னனின் பெயரையும் புனைந்து பேசுவதைக் காண்கின்றோம். மன்னனின் பக்தியை உவந்து அவனை ஆழ்வார் புகழ்ந்ததாகக் கொள்ளவேண்டுமேயன்றி ஆழ்வார் ‘நாக்கொண்டு மானிடம் பாடும்’[1] கொள்கையுடையவர் அல்லர் என்பதையும் உணர்கின்றோம். இந்த எண்ணங்களுடன் மன அமைதியுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.

***

  1. நான். திருவந் - 75.