பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் ஆறும் புறத்தில் ஒன்றும்

67

பெரியமா மேனி அண்டம்ஊ டுருவ
          பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்.”[1]

(அரவம்-பாம்பு; அவை-சபை; அஞ்சிடாதே-பயப்படாமல்; இட-அமைக்க; மேனி - உடம்பு; நிமிர்ந்தோன்-வளர்ந்த பெருமான்)

என்று திருமங்கையாழ்வார் அநுசந்திக்கின்றார். அப்போது கொண்ட விசுவரூபத் திருக்கோலத்தின் நினைவுச் சின்னமாகப் பெரிய திருமேனியுடன் சேவை சாதிக்கும் இடம் பாடகம் ஆகும்.

இந்த இதிகாச நிகழ்ச்சியை நினைந்த வண்ணம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பாண்டவ தூதனையும், அருகில் உள்ள உருக்குமினி, சத்தியபாமை என்ற இரண்டு தாய்மார்களையும் சேவிக்கின்றோம். திருமங்கையாழ்வார்,

“கல்ஆர் மதிள்சூழ் கச்சி நகருள்
          நச்சி பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க இருந்த
          அம்மான்.”[2]

என்று இப்பெருமானை அநுசந்திக்கின்றார். இவர் திருநெடுந்தாண்டகத்தில்,

“கல்உயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சிமேய களிறு!”[3]

(மேய-எழுந்தருளியிருக்கும்)

என்று அநுசந்தித்த எம்பெருமான் திருப்பாடகத்து நாயனார் என்பவரே என்பது பெரியவாச்சான் பிள்ளையின் திருவுள்ளம். இந்த ஆழ்வாரும், பூதத்தாழ்வார்,[4] பேயாழ்வார்,[5] திருமழிசையாழ்வார்,[6] நம்மாழ்வார்[7]

ஆகிய ஆழ்வார்களும் இந்த எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளனர். “பூம்பாடகத்துள், இருந்தானை ஏத்தும்என் நெஞ்சு”[8] என்று தன் நெஞ்சினை ஆற்றுப்படுத்துகின்றார் பூதத்தாழ்வார். “இருந்த தெந்தை பாடகத்து”[9] என்று போற்றியுரைக்கின்றார் திருமழிசைப்பிரான்.

  1. பெரி.திரு - 9.1:8.
  2. பெரி.திரு - 6.10:4.
  3. திருநெடுந் - 15.
  4. இரண்.திருவந் - 94.
  5. மூன்.திருவந் - 30, 64.
  6. திருச். விருத் - 63, 64.
  7. திருவாய் - 5.10:6.
  8. இரண்.திருவந் - 94.
  9. திருச். விருத் 64.