பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தொண்டைநாட்டுத் திருப்பதிகள்

“பண்டேஉன் தொண்டுஆம்
        பழஉயிரை என்னதுஎன்று
கொண்டேனைக் கள்வன்என்று
        கூறாதே - மண்தலத்தோர்
புள்வாய் பிறந்த
        புயலே உனைக்கச்சிக்
கள்வா!’ என்(று) ஒதுவதுஎன்
        கண்டு?”[1]

(தொண்டுஆம்-அடிமைப் பட்டிருக்கும்; பழஉயிர்-அநாதியாகவுள்ள ஆன்மா; கொண்டேனை-கருதியிருந்த என்னை: மண் தலத்தோர்-பூமியில் உள்ளவர்கள் புள் - கொக்கு (பகாசுரன்); புயலே-நீர் கொண்ட மேகம் போன்றவனே; ஒதுவது - சொல்லுவது; என் கண்டு-என்ன காரணம் கண்டு)

என்ற பாசுரத்தை ஓதி அதன் தத்துவக் கருத்தில் ஆழங்கால் படுகின்றோம். கள்ளம் என்பது திருடுதல்; ஒருவர்க்குரிய பொருளைத் தன்னுடையதாக்கிக் கொள்வது. ‘அநாதிகாலம் தொட்டு உனக்கே அடிமையாகக் கிடந்த ஆன்மாவை நான் என்னுடையதென்று கொள்வதனால் என்னைக் கள்வன் என்றல் தகும்; உலகிலுள்ள பொருள்கள் யாவும் நின்னுடையன வேயாதலால், வெண்ணெய் கொள்ளுதல் முதலிய தொழில்களைச் செய்யினும் உன்னைக் கள்வன் என்று கூறுதல் தகாது. இங்ஙனம் உண்மை இருக்க, உலகோர் இதனை ஆராயாது என்னை யானே திருடிக்கொண்ட பெருந்திருடனாகிய என்னைக் கள்வன் என்று கூறாமல் எல்லாவற்றிற்கும் இறைவனான உன்னைக் கள்வன் என்கின்றனரே. இஃது என்ன பேதைமை!”என்று திவ்வியகவி சமத்காரம் தோன்றக் கூறியதைச் சிந்திக்கின்றோம்.

இதிலுள்ள தத்துவக் கருத்து நம் சிந்தையில் குமிழியிடத் தொடங்குகின்றது. சேஷத்துவம் (எம்பெருமானுக்கு அடிமையாயிருத்தல்) ஆன்மாவின் சொரூபமாகையால் அதற்கு மாறாக ஆன்மா தனக்கு உரியது என்று கருதுவது ஆன்மாபஹாரம் (ஈசுவரனுக்கு வசப்பட்டிருக்கும் ஆன்மாவைச் சுதந்திரர் என்று நினைத்தல்) ஆதலைக் காண்கின்றோம். நித்தியனான ஆன்மா அநாதியாகவே எம்பெருமானுக்கு அடியவனாதலால் ‘பண்டே உன் தொண்டாம் பழ உயிர்’ என்று கூறியுள்ளார் கவிஞர் என்பதனையும் அறிகின்றோம். இந்த எண்ணங்கொண்ட மனநிறைவுடன் சந்நிதியை விட்டு வெளிவருகின்றோம்.

  1. நூற். திருப். அந் - 85