பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் ஆறும் புறத்தில் ஒன்றும்

79

என பாசுரத்தை ஓதுகின்றோம். எம்பெருமான் நான்கு யுகங்களிலும் நான்கு நிறமாயிருக்கிறபடியைச் சாத்திரங்கள் பேசுகின்றன. அதனை உளங்கொண்டு அய்யங்கார் கூறுவதைச் சிந்திக்கின்றோம்.

“பாலின் நீர்மை, செம்பொன் நீர்மை,
      பாசியின் பசும்புறம்
போலும் நீர்மை, பொற்புடைத் தடத்து
      வண்டு விண்டுலாம்
நீல நீர்மை என்றிவைநிறைந்த
      காலம் நான்குமாய்”[1]

என்ற திருமழிசைப் பிரானின் பாசுரப் பகுதியும்,

திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்,
      திரேதைக்கண் வளைஉருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல்அமுதம் கொண்ட காலம்[2]

(வளைஉரு-வெள்ளைநிறம்)

என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரப் பகுதியும் அய்யங்கார் பாசுரத்திற்கு மூலமாக அமைந்திருப்பதையும் சிந்திக்கின்றோம். இந்த நிலையில் தீர்த்தம் திருத்துழாய் பெற்றுத் திரும்புகின்றோம்.

இத்திருக்கோயிலுக்கருகில் பச்சை வண்ணர் சந்நிதி உள்ளது. அங்குச் சென்று அப்பெருமானையும் சேவிக்கின்றோம்.

திருப்புட்குழி: இந்தத் திவ்விய தேசம் காஞ்சியிலிருந்து தென்மேற்குத் திசையில் சுமார் ஏழு கல் தொலைவிலுள்ளது. நெடுஞ்சாலையில் இறங்கி உட்புறமாகவுள்ள குறுக்குச் சாலையின் வழியாக நான்கு ஃபர்லாங்கு தூரம் நடந்து சென்று இத்திருப்பதியை அடைதல் வேண்டும். பெரிய உடையார் என்று வழங்கப்பெறும் சடாயு சீதாப்பிராட்டியை இராவணன் கவர்ந்து கொண்டு சென்றபொழுது அவனை வழிமறித்து அவனுடன் கடும்போர் விளைத்தபொழுது இராவணன் சங்கரன் அளித்த வாளால் அவருடைய சிறகுகளைவெட்டி வீழ்த்தி அவனைக் குற்றுயிராக விட்டுச் சென்றான் என்றும், சீதையைத் தேடிவந்த இராமலக்குமணர்கள் சடாயுவைக் கண்டனர் என்றும்,

  1. திருச். விருத் - 44
  2. திருநெடுந் - 3