பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

11



நிமிர்ந்து நில்லுங்கள்:

மனிதனை ஒரு சமூகத்தோடு சேர்ந்து வாழும் மிருகம் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுவார்கள். ஐந்தறிவுள்ள மிருகங்கள், அதற்கும் குறைந்த அறிவு உள்ள உயிர்கள் இவற்றைவிட, மேலான ஒரு அறிவை, பகுத்தறிவு என்று பெற்றுக்கொண்டு மனிதன் மதிப்போடு வாழ வேண்டும். ஆனால் வாழவில்லை.

சிரிக்கத் தெரிந்தவனாக, சிந்திக்க முடிந்தனவாக, பேசப் புரிந்தவனாக, பேராண்மை மிக்கவனாகவும் மனிதன் இருக்கிறான். அத்துடன் மட்டுமல்ல, அவன் நிமிர்ந்து நிற்கக் கூடிய ஓர் அறிவுள்ள ஆண்மையுள்ள ஜீவன் என்பதையும் அவன் மறந்து போய் வாழ்கிறான்.

நிமிர்ந்து நிற்பதற்கும் வயிற்றுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. நிதானமாகவே நாம் யோசிக்கலாம்.

உடல் முழுவதும் எலும்புகளின் இணைப்பால் உருவாகி, அதன்மேல் சட்டை போன்ற அமைப்புள்ள தசைகள் கூட்டம் அணைத்துக் கொண்டு இருக்க, அதற்கிடையே நரம்புக்கூட்டம் இரத்தக்குழாய்கள் கூட்டம் போன்ற அமைப்புகள் ஏராளம் இருந்து கொண்டு, சீராக சிறப்பாகப் பணியாற்றுகின்றன என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும்.

எலும்பும் தசைகளும் சேர்ந்து ஓர் உறுப்பை உடலில் உண்டாக்கியிருப்பது பொதுத் தன்மை என்றால், வயிறு மட்டும் அதற்கு விதிவிலக்காக அமைந்துவிட்டிருக்கிறது.