பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

37



4. தொந்தியின்றி வாழுங்கள்

பட்டினி கிடந்தால் போகுமா?

வந்து விட்ட தொந்தியை விரட்டி விட வேண்டும் என்ற வேகத்துடனும் வெறியுடனும் விவரம் புரியாமலேயே, எத்தனையோ முறைகளையும், வழிகளையும் அன்பர்கள் பின் பற்றுகின்றார்கள்.

தொந்தியைத் தொலைக்கும் வழிகளைக் கூறி, விளம்பரங்கள் ஏதாவது வருகின்றனவா என்றும் பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்க்கின்றனர். அக்கம் பக்கம் உள்ளவர்களை ஆலோசனை கேட்கின்றனர். அரை வேக்காடு போன்ற பல அறிவுரைகளை ஆர்வத்தோடும், அதிக அக்கறையுடனும் கேட்டு, செயலில் முனைகின்றனர்.

பல நாளாகியும், போதிய பலன் கிடைக்காது போகவே, ஒருவித சலிப்பும் வெறுப்பும் கொண்டு, தமக்குள்ளேயே ஒரு தீர்மானத்திற்கு வருகின்றனர். அது என்னவென்றால் பட்டினி கிடந்தால் தொந்தி போய்விடும் என்பது தான்.

பட்டினி கிடக்க முயன்று, பிறகு உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக் கொண்டு வந்தாலும், தொந்தி தொலைவது இல்லையே? காரணம் என்ன?

உண்ணும் உணவின் அளவைக் குறைத்தாலும், பட்டினி கிடந்தாலும் பாதிக்கப்படுவது வயிறல்ல. பெருத்த தொந்தியல்ல. உடல்தான்.