பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

38



உணவின் அளவு குறைவதால், உணவே இல்லாததால், உடலின் எடை குறையுமே தவிர, வயிற்றின் அளவு குறையாது. அவ்வாறு உடல் குறைவது உடலுக்கு அசதியையும் அயற்சியையும் தந்து, ஆபத்தான நிலைக்குக் கொண்டு போய்விடும்.

நாம் ஏன் உணவை உட்கொள்ளுகிறோம் என்பதை இந்த நேரத்தில் கருத்தில் கொள்வது மிகப் பொருத்தமாக அமையும். நாம் வேலை செய்யும் பொழுது உடலில் உள்ள தசைகளின் திசுக்கள் உடைந்தும், பழுதடைந்தும் போவதுடன், களைத்துப் போயும் விடுகின்றன.

அவ்வாறு பழுதடைந்தவைகளைப் புதுப்பிக்கவும், உணவின் ஊட்டம் உதவுகின்றது. அத்துடன் உடலில் உள்ள உஷண நிலையை ஒரே சீராக (98.4°F) நிலையாக வைத்திருக்கவும், மீண்டும் களைப்பின்றி பணியாற்றக் கூடிய சக்தியை அளிக்கவும் உணவு பயன்படுகின்றது.

ஆகவே, உணவைக் குறைப்பதானது உடலுக்கு ஊறு விளைவிப்பதாகும். அத்துடன், உடல் உறுப்புக்களும் தம் வலிமை இழந்து விடுகின்றன. மீண்டும் உணவினை அதிகம் உண்டால் உறுப்புகள் செழுமையடைந்து விடும் என்றால், பாதிக்கப்பட்ட உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவை தானே! பலக்குறைவு தானே!

படுக்கையில் கிடக்கும் நோயாளிகள் உணவின்றி பட்டினி கிடக்கலாம். திடகாத்திரமானவர்கள் ஏன் பசியை அடக்க வேண்டும். ஆகவே, பட்டினி கிடப்பவர்கள் இவ்வழியினைத் தவிர்த்து விட வேண்டும்.