பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திறமாகப் பகுத்து விளக்கும் பொருளிலக்கண நெறியானது வேறு எம்மொழிக்கும் இல்லாது தமிழுக்கேயுரிய தனிச்சிறப்புடையதாக அமைந்திருத்தலாலும், தமிழில் வழங்கும் பொருளிலக்கணம் போன்று வரையறுத்து வடித்தமைந்த பொருளிலக்கண மரபுகள் பண்டைய வடமொழியிலக்கண நூல்களில் இடம்பெறாமையாலும், இத்தகைய பொருள் மரபு தமிழ் மொழி வளர்ச்சிக்குத் துணை செய்வது மட்டுமன்றி மக்கள் எல்லோரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என இகலின்றிவாழும் வாழ்வியல் நெறியாகிய உலக ஒருமைப்பாட்டுணர்வுக்கும் துணைபுரியும் சிறப்புடையதாதலானும் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு மெய்ம்மையான உரை வெளிவருதல் இன்றியமையாததாகும். தொல்காப்பியனார் காலத்தின் மெய்மையான வரலாற்றுண்மைகளைத் தம்காலச் சூழ்நிலை யால் மறந்தமையால், நச்சினார்க்கினியர் முதலிய பிற்கால உரையாசிரியர்கள் தாம் எழுதிய தொல்காப்பியவுரையில் வடநூல் முடிபுகள் சிலவற்றை வலிந்து புகுத்திக் கற்போரை மயங்கவைப்பாராயினர். இந்நிலையில் நாவலர் பாரதியார் அவர்கள் தமிழரது தொன்மை நாகரிக வாழ்வியல் அமைப்பினை உள்ளவாறு அறிவுறுத்தும் முறையில் கற்கும் மாணவர்களிடை யிலும் கேட்கும் அவைகளிலும் உள்ளவாறு எடுத்துக்காட்டிய தோடமையாது தமது தொல்காப்பியப் பொருட்படலப் புத்துரை யிலும் விளக்கியுரைக்கும் புலமைப்பணியினைத் தமது வாழ்க்கை யின் குறிக்கோளாகக் கொண்டார்கள். அவர்களது நன்முயற்சி அகத்திணை, புறத்தினை, மெய்ப்பாடு என்னும் மூன்றியல் களுக்கும் உரைகாணும் அளவிற் பெரும் பயன் நல்கியது. அவர் தம் முதுமைப் பருவத்தளர்ச்சியும் அவர்கள் கூறும் கருத்துக்களை உடனிருந்து எழுதி வெளியிட்டு உதவும் ஆதரவாளர் இல்லாமையும் எஞ்சிய இயல்களுக்கும் இவ்வாறு உரைவரையும் அவரது ஆர்வத்தைத் தடை செய்துவிட்டன. ஆயினும் அவர்களால், எழுதப்பெற்ற தொல்காப்பியவுரைப் பகுதிகளில் அகத்திணையியல் புறத்தினையியல் என்னும் இரண்டியல்களுக்கம் அமைந்த உரைப்பகுதிகள் தொல்காப்பியனார் காலத் தமிழ் மக்களின் தூய வாழ்க்கை நெறி முறைகளையும் அக்காலத் தமிழர் சமுதாய அமைப்பினையும் ஓரளவு வரையறுத்துத் தெளிவுபடுத்தும் முறையில் அமைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.