பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செறிவும் தெளிவும் நெறியா நெகிழ்வும் நிரம்பியது; இத்தமிழ் நூல் பாணினிக்குப் பல நூற்றாண்டுகள் முந்தியது. வான்மீன்கள் பாராட்டிய கடல் கொண்ட காடம் அழியு முன், அம்மூதூரில் ஆண்ட பாண்டியன் ‘நிலந்தருதிருவின் நெடியோன்’ காலத்தில் அவனவையை அணிசெய்த புலவருள் தலைமை தாங்கிய பெரியார், ஒல்காப் புகழுடைத் தொல்காப்பியரே தம் பெயரால் இத்தமிழ்ப் பெரு நூலை இயற்றினர் என்று அந்நூற்பாயிரக் கூறுகின்றது’ -

ஆசிரியர் தொல்காப்பியனார் தாம் இயற்றிய நூலிற் பலவிடத்தும் வடநூல் வழியினைத் தழுவாமல் தமிழகத்தில் தோன்றி வழங்கும் உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய தமிழ் வழக்கினையே உளங்கொண்டு இந்நூலை இயற்றியதாகத் தெளிவாகக் குறித்துள்ளார். "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி, செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட நாடித் தமிழிலக்கண மரபுகளைத் தொகுத்துரைத்தான் தொல்காப்பியன் என்னும் தவக் செல்வன்"என இந்நூற்சிறப்புப் பாயிரத்தில் ஆசிரியர் பனம்பாரனார் தெளிவாகக் கூறுதலால் இத்தொல்காப்பியத்தில் விரித்துரைக்கப்பெற்றுள்ள இலக்கண மரபுகள் யாவும் ஆரியம் என்னும் அயன் மொழித் தொடர்பின்றித் தமிழுக்கேயுரிய தனித் தன்மை வாய்ந்தன என்பது நன்கு தெளியப்படும்,

தமிழ்மொழியின் எழுத்துச் சொற்பொருள் என்னும் பாகுபாட்டின் இயற்கையமைப்பினைச் சிறிதும் சிதையவிடாது பேணிக் காக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் இயற்றப்பெற்ற இயற்றமிழிலக்கணமாகிய தொல்காப்பியம், பண்டைத் தமிழிலக்கியங்களின் அமைப்பினையும் பிற்காலத்தில் தோன்றிவழங்கும் பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத பொருட் கூறுகளையும் தன் பாற்கொண்டு திகழும் முழுமைவாய்ந்த தமிழியல் நூலாகும். தலைச்சங்கத்து இறுதியில் தோன்றிய இந்நூல், இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக விளங்கிய தொன்மை வாய்ந்தது என்பதனை இறையனார்

5