பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூல் வரிசை சிறந்த அமைப்புடையதாய், இளம்பூரணர் முதல் சோமசுந்தர பாரதியார் வரையிலான உரைகளை உடைய தாய்த் திகழ்கின்றது. ஒவ்வொரு நூற்பாவின் இறுதியிலும் உள்ள வெள்ளைவாரணரின் ஆய்வுரை கருத்துத் தெளிவு தந்து தொல்காப்பியக் கல்விக்கு வழிகாட்டுவதாய் அமைகிறது. மேலும் வெள்ளைவாரணர் தாம் தந்திருக்கும் அடிக்குறிப்புக்களின் வழி மூலத்திலும் உரையிலும் கண்டிருக்கும் பிழைபாடுகளை நீக்கத் துணைபுரிகின்றார். ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இப்பதிப்புக்கள் பெரிதும் பயன்படும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கும் பேராசிரியர் க. வெள்ளைவாரணர் அவர்களுக்கும் தமிழுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது. இவ்வுரைவளப் பதிப்புக்களின் வழித் தொல்காப்பியக் கல்வி வளரும் வகை செய்தல் வேண்டும். அதுவே அமரராகிவிட்ட பெரும் பேராசிரியர் வெள்ளைவாரணனாருக்குத் தமிழுலகம் செய்யும் அஞ்சலியாகும்.

தமிழண்ணல்