பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பழந்தமிழ் மரபுகளைக் காப்பதற்காக எழுந்த நூல் தொல்காப்பியம் ஆகும். தமிழ் மொழியில், நற்பொருள் நல்கும் உயிராம் சொற்கள், செய்யுள்’ எனும் யாக்கை பெற்றுச் செவ்விதின் இயங்கும் பெற்றியை யாப்பியல் விளக்குகிறது; காப்பியச் செய்யுளியலைப் பயில்வோர் தொல்காப்பியர்தம் கணக்கியல் அறிவின் ஆழமும் அகலமும் அறிந்து மகிழ்வர். "உரையாசிரியர்' எனும் சிறப்பினைப் பெற்றவர் உளங்கொள் உரைகூறும் இளம்பூரண அடிகள்; இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்டவர்; தமிழ்மரபில் பெரிதும் தோய்ந்து ஆய்ந்து எழுதிய இவருரை இன்றும் நின்று நிலவுகிறது. பேராசிரியர் உரை, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் எனும் நான்கியல்களுக்கும் காணப்படுகிறது. நச்சினார்க்கினியர் உரை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரத்துள் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் பொருளியல், செய்யுளியல் என்னும் ஆறு இயல்களுக்கும் காணப்படுகிறது. சேனாவரையர், தெய்வச் சிலையார், கல்லாடனார் ஆகியோர் இயற்றிய உரைகள் சொல்லதிகாரம் ஒன்றற்கே உள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வாயிலாக வெளிவரும் இவ் உரைக்களஞ்சியம் தனிச்சிறப்புடையது. செய்யுளியலுக்குரிய முப்பெரும் பழம்புலவர் உரைகள் ஆராயப் பட்டு, அவற்றின் சீர்மையும் நீர் மையும் நோக்கிப் பின்னர்த் தம் ஆய்வுரை நேரிய வகையில் வழங்குகிறார் பேராசிரியர் வெள்ளைவாரணனார் அவர்கள். இதனால் இதுவரை புலவர் பெருமக்களுக்கு ஏற்பட்ட ஐயங்கள் களையப்படுகின்றன. இப்பதிப்பு வெளிவரும் நேரத்தில் பேராசிரியர் வெள்ளைவாரணனார் இப்பூலகில் இல்லை. தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தவர் எனும் மொழிக்கேற்பப் புகழ் ஏணியில் ஏறி, வரா உலகம் புக்கனர்.