பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூ எரு யாக உணர்ந்து அசையினையும் சீரினையும் பகுத்துணர்த்துக என்பதாம். 'ஆடுநடைப் புரவி அரசர் கோமகன்' எனவரும் அகவலடியின் முதற்சீரின் அசைகளை ஆடு-நடைப் (நேர்பு-நிரை) என இரண்டாகப் பகுத்து ஆசிரியவுரிச்சீராக இயைத்துக் கூறுங்கால் அசையும் சீரும் இசையொடு பொருந்தி இனிய ஓசையுடையதாக அமைதலும், இவ்வாறன்றி ஆ-டுநடைப் (நேர்-நிரை-நேர்) என மூவசைச் சீராகப் பகுத்துக் கூறுங்கால் இன்னா ஒசையினதாதலும் செவி கருவியாகக் கூர்ந்துணர்வார்க்கு இனிது புலனாம். 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்’ எனவரும் குறள்வெண்பாவின் இரண்டாமடியினை இறைவ! னடிசேரா தார்’ என மூன்று சீர்களாகப் பிரித்து இசையொடு சேர்த்துங்கால் அவ்வடி வெண்பாவின் இறுதியடியாகிய முச்சீரடியாய் இனிய ஓசையுடையதாதலும், அவ்வாறன்றி "இறை வனடி சேராதார்’ எனச் சொற்கிடந்தாங்கே பிரித்தால் வெண்பாவின் ஈற்றடிக்குரிய முச்சீரடியாகாது இருசீரடியாய்ச் சீர்குன்றி இன்னா ஒசைத்தாதலும் காணலாம். சொற்களின் பொருள் ஒன்றைமட்டும் நோக்கி அசையும் சீரும் பகுக்காது பாவுக்குரிய இன்னோசையினையே நோக்கி இறைவ! னடிசேரா; தார்’ என இவ்வாறு அசையும் சீரும் பகுத்துரைக்கும் முறையினைப் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள் வகையுளி என வழங்குவர். "வகையுளி” என்பது, முன்னும் பின்னும் அசை முதலாய் உறுப்புக்கள் நிற்புழி அறிந்து குற்றப் படாமல் ஒசை யறுத்தல் - 'அருள்நோக்கு நீரார் அசைசி ரடிக்கண் பொருள்நோக்கா தோசையே நோக்கி - மருள்நீக்கிக் கூம்பவும் கூம்பா தலரவுங் கொண்டியற்றல் வாய்ந்த வகையுளியின் மாண்பு' இதனை விரித்து உரைத்துக் கொள்க’ எனவரும் யாப்பருங்கலவிருத்தியும் மேற்கோளும் இங்குக் கருதத்தக்கனவாகும். "வகுத்தனர் உணர்த்தல்’ என்ற தொடரும் வதையுளிஎனும் பெயர்க்கு ஆதாரமாதல் காண்க.