பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க௩

தொல்காப்பியம் - பொருளதிகாாம்


எனப்படும். இவ்வுவமத்தினைக் கருவியாகக் கொண்டே இரு திணைப்பொருள்களும் உலகவழக்கினுள் நன்கு உணர்த்தப்பெற்று வருதல், காணலாம். இவ்வாறு உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகைவழக்கினும் நிலைபெற்று வழங்கும் பொருள்புலப் பாட்டு நெறியாகிய உவமத்தின் இலக்கணத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியலில் விரித்துணர்த்துகின்றார். அதனால் இஃது உவமவியல் என்னும் பெயர்த்தாயிற்று.

மேல், குறிப்புப்பற்றிவரும் மெய்ப்பாடு கூறினார்; இது பண்புந் தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது என இளம்பூரணரும், உவமத்தாலும் பொருள் புலப்பாடே கூறுகின்றாராதலின், மேல் பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபுடையதாயிற்று' எனப் பேராசிரியரும், இவ்வியலின் வைப்பு முறைக்கு இயைபு காட்டினர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை இளம்பூரணர் முப்பத்தெட்டாகவும் பேராசிரியர் முப்பத்தேழாகவும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள்.

மேல், அகத்திணையியலுள்ள உள்ளுறையுவமம், ஏனையுவமம் என உவமத்தினை இரண்டாக்கி ஒதிய ஆசிரியர், அவ்விரண்டனுள்ளும் உலகவழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பெருக வழங்கும் ஏனையுவமத்தின் இயல்பினை இவ்வியலின் முதற்கண்ணும், செய்யுளுக் கேயுரிய உள்ளுறையுவமத்தின் இலக்கணத்தினைச் செய்யுளியலுடன் இபையுப் படி இவ்வியலின் இறுகிக்கண்ணும் வைத்து விளக்குகின்றார். இதன்கண் ஒன்றுமுதல் இருபத்திரண்டு வரையுள்ள சூத்திரங்களால் ஏனையுவமத்தின் இலக்கணமும், இருபத்துமூன்று முதல் முப்பத்துமூன்று வரையுள்ள சூத்திரங்களால் உள்ளுறையுவமத்தின் இலக்கணமும், முப்பத்து நான்கு முதல் முப்பத்தெட்டு வரையுள்ள சூத்திரங்களால் உள்ளுறையுவமம் போன்று மனத்தாற் கருதியுணர் தற்குரிய ஏனையுவமத்தின் வேறுபாடுகளும் பிறவும் விரித்துரைக்கப் பெற்றுள்ளன.

கூறுதற்கு எடுத்துக்கொண்ட பொருளைப் "பொருள்” என்றும் அதனது இயல்பினை விளக்கவேண்டி ஒப்புமையாக எடுத்துக்காட்டடப்படும் பிறபொருளை 'உவமம்’ என்றும் கூறுவர் தொல்காப்பியர். பொருள், உவமம் என்னும் இவ்விரண்டினையும் முறையே 'உவமேயம்’ என்றும் 'உபமானம் என்றும் வழங்குவர் வடநூலார். உவபமும் பொருளும் ஆகிய இவ்விரண்டின்கண்ணும் வண்ணம், வடிவு, தொழில், பயன் என்பனபற்றியமைந்த ஒப்புத்தன்மை பொதுத் தன்மை யெனப்படும். அத்தன்மையினை விளக்குதற்பொருட்டு