பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 உவமையியல் நூற்பா ௪ ௨௩

ஆய்வுரை

இஃது உவமை தோன்றுதற்குரிய நிலைக்களம் உணர்த்துகின்றது. (இ-ள்) சிறப்பு, நலன், காதல், வலி என்னும் அந்நால் வகைப்பண்புக்கும் உவமத் தோற்றத்திற்குரிய நிலைக்களமாம் என்பர் ஆசிரியர். (எ-று) -

அவற்றுள் சிறப்பு என்பது, உலகத்துள் இயல்பு வகை யாலன்றிச் செயற்கை வகையாற் பெறுவது. நலன் என்பது, ஒரு பொருட்கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை. காதல் என்பது நலனும் வலியும் இல்லாநிலையிலும் காதல் மிகுதியால் அவையுள்ளவாகக் கொண்டு கூறுவது. வலி என்பது, ஒரு பொருளுக்குத் தன் தன்மையால் உளதாகிய ஆற்றல். தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் தமிழகத்தின் நலங்கருதித் தம்மில் ஒன்றுகூடி அரசவையில் வீற்றிருந்த தோற்றம் போல ஆடல், பாடல், இயம் இம்மூன்றும் பிரிவின்றி ஒத்து நிகழும் வண்ணம் பொருநர் தலைவன் தங்கியிருந்த செய்தி பொருநராற்றுப்படையிற் பேசப்படுகிறது இவ்வுவமை, சிறப்பினை நிலைக்களமாகக் கொண்டு பிறந்ததாகும். ஒவத்தன்ன இடனுடைய வரைப்பின் (புறம்-251) என்னும் பாடலில் 'ஓவியம்போலும் பேரழகுவாய்ந்த இடத்தினையுடைய நகரம்’ என அதன் நலந்தோன்ற உவமை கூறினமையின் இவ்வுவமை 'நலன்' என்பதனை நிலைக்களமாகக் கொண்டு பிறந்ததாகும். 'பாவையன்ன பலராய் மான் கவின்’ (அகம்-98) எனவரும் பாடலில் பாவையினை யொத்த பலரும் ஆராயத்தக்க மாண்பமைந்த என் மகளது வனப்பு எனத் தாய் தன் மகளிடத்தே கொண்ட பேரன்பு காரணமாகக் கூறியதாகலின் இவ்வுவமையின் நிலைக்களம் காதல் என்பது நன்கு புலனாம்.திருமாவளவனாகிய வேந்தனிடத்தே அமைந்துள்ள வலிமை காரணமாக 'அரிமா வன்ன அணங்குடைத்துப்பின் திருமாவளவன் (பட்டினப். 258, 299) என அவனுக்குச் சிங்க ஏற்றினை உவமையாகக் கூறுதலால் இவ்வுவமை வலி நிலைக் களமாகப் பிறத்தாகும்.

சிறப்பு, நலன், காதல், லலி என்னும் இந்நான்கையும் உவமையின் நிலைக்களம் எனக் கூறவே, இவற்றையடிப்படையாகக் கொண்டன்றி எத்தகைய உவமமும் பிறவாது என்பது கருத்தாயிற்று.

௫. கிழக்கிடும் பொருளோ அடைந்து மாகும்.

இளம்பூரணம்

என்.எனின். எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று.

  • கிழக கிடு பா.வே.