பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல் நூற்பா ௫

உ௫

பேராசிரியம்

இது, மேற்கூறிய நிலைக்களத்திற்கு ஒரு புறனடை.

(இ-ள்) அந்நிலைக்களம் நான்கேயன்றிக் கிழக்கிடு பொருளோடு ஐந்தெனவும் படும் (எ-று)'

  கிழக்கிடுபொருளென்பது கீழ்ப்படுக்கப்படும் பொருள்;
 "கிளைஇயகுரலே கிழக்கு வீழ்ந் தனவே”     (குறுந் 337)

என்புழிக் கீழ்வீழ்ந்தன என்பதனைக் கிழக்குவீழ்ந்தன என்பவாகலின். ஒரு பொருளின் இழிபு கூறுவான் உவமத்தான் இழிபு தோன்றுவித்தலின் அதுவும் நிலைக்களமா மென்றவாறு. அவை

    "உள்ளு தாவியிற் பைப்பய நுணுகி"     (அகம். 71)

எனவும்,

   "அரவுதுங்கு மதியி னுதலொளி கரப்ப" (அகம்.313) 

எனவும் வரும்.

இவை பொருளன்றி உவமையுங் கிழக்கிடப்பட்டன. வாலெனின், அங்ங்ணமாயினும் அவை பொருளோடு சார்த்தி நோக்க உயரந்தனவெனப்படும்.

ஆய்வுரை
 இது, மற்றுமொரு நிலைக்களன் உணர்த்துகின்றது.

(இ-ள்) ஒருபொருளின் இழிபினைப் புலப்படுத்துவோர், உவமத்தால் அதனது இயல்பு தோன்றக் கூறுதல் இயல்பாதலின், கிழக்கிடுபொருள் எனப்படும். அவ்விழிபினையும் மேற்குறித்த நான்கினோடும் சேர்த்தென்ன உவமத்தின் நிலைக்களம் ஐந்தாகும். (எ-று)

கிழக்கிடு பொருள் - கீழ்ப்படுக்கப்படும் பொருள்.

"அரவுதுங்குமதியின் நுதலொளிகரப்ப" (அகம் 313) என்புழி, பிரிவிடை வேறு பட்டு வருந்தும் தலைமகளது துதல் ஒளியிழந்த நிலையினைக் கூறுவார், இராகுவென்னும் பாம்பினால் விழுங்கப் பட்டு ஒளியிழந்த திங்களை அதற்கு உவமை கூறினமையின் இது கிழக்கிடுபொருள் நிலைக்களமாகப் பிறந்த உவமையாகும்.

சிறப்பு, நலன், காதல், வலி என முற்கூறிய நான்கினோடு கிழக்கிடுபொருளாகிய இதனையுஞ் சேர்த்தெண்ண உவமத்தின் நிலைக்களம் ஐந்து எனக்கொள்ளுதலும் பொருந்தும் என்பதாம்.

1. ஒருபொருளினது இழிவினைக் கூறுவன் உவமையினால் அதனைப்புலப்படுத்தலின் அவ்விழியும் உவமைக்கு நிலைக்களமாயிற்று.