பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



௨௬

தொல்காப்பியம்பொருளதிகாரம்


       "முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கு 
        நுதலிய மரபி னுரியவை யுரிய"

இளம்பூரணம்

  என்-எனின். இஃது உவமைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.
     ஐயம் அறுத்தது உமாம்,

(இ - ள்.) முதலுஞ் சினையுமென்று சொல்லப்பட்ட இரு வகைப்பொருட்குங் கருதிய மரபினான் அவற்றிற்கேற்பவை உரியவாம் என்றவாறு."

சொல்லதிகாரத்துட்,

     "செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் 
      கருப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே"

என்றார். அவ்வாறன்றி உவமைக்கு நியமமில்லை என்றவாறாயிற்று.

  "ஒருகுழை யவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்" (கலித்.உக)

என்பது முதற்கு முதல் உவமமாயிற்று.

 "அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட
  குடைநிழல் தோன்று நின் செம்மலைக் காணுஉ’ (கலித்.அச)

என்பது முதற்குச் சினை உவமமாயிற்று.

  "தாமரை புரையுங் காமர் சேவடி"      (குறுந்.கடவுள் வாழ்த்து)

என்பது சினைக்குச் சினை உவமமாயிற்று.

'நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி’’ (அகம்.அச)

என்பது சினைக்கு முதல் உவமமாயிற்று.

1. 'அவ்வாறு இங்கு உவமைக்கு நியமமில்லையென்றவாறாயிற்று' என்றிருத்தல் பொருட்பொருத்தமுடையதாகும். முதலுக்கு முதலும் சினைக்குச் சினையும் எனச் சொல்லதிகாரத்திற்கூறிய அல்வரையறை செய்யுளிற்பொருள்புலப்பாடுபற்றி வரும் இவ்வுவமைக்கு வேண்டுவதன்று என்பார், 'நுதலியமரபின் உரியவைஉரிய’ என்றார்.