பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



௯௰

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இதனாற் சொல்லியது உவமவாய்பாடு தோன்றா உவமம் பொருட்ருட்குப் புணராக்கண்ணும் உவம உள' என்றவாறாம்.

  "மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிந்து 
   நோக்கக் கழையும் விருந்து’’.      (குறள். கo)

இதன்கண் 'அதுபோல’ எனச் சுட்டிக்கூறா வுவமையாயினவாறு கண்டுகொள்க. (எ)

பேராசிரியம்

    இஃது, எய்தாதது எய்துவித்தது.

(இ - ள்.) உவமத்திற்கும் பொருட்கும் பொதுவாகிய ஒப்புமைக்குணம் நான்கினையும் விதந்து சொல்லி உரையாதவழி அவ்விரண்டினையும் எதிர்பெய்து கூட்டி ஆண்டுப் பொருந்திய தொன்று பொருந்தியதுபற்றி வினை பயன் மெய்யுருவென்னும் நான்கினுள் இன்னதென்று சொல்லப்படும். (எ - று).

'பவளம் போற் செந்துவர்வா' யென்பது சுட்டிக் கூறிய வுவமம்; என்னை? இரண்டிற்கும் பொதுவாகிய செம்மைக்குணத் திணைச் சொல்லியே உவமஞ் சொல்லினமையின். அது பவளவா என்கின்றவழிச் சுட்டிக்கூறா வுவமமாம் ஆண்டுப் பவளத்தினையும் வாயினையுங் கூட்டிப்பார்த்துச் செம்மைக் குணம்பற்றி உவமஞ் செய்ததென்று அறியப்படும்; அல்லாக்கால், வல்லென்ற கல்லிற்கும், மெல்லென்ற இதழிற்கும் உள்ளதோர் ஒப்புமை ஆண்டில்லை யென்பது; பிறவும் அன்ன. (எ)
              

ஆய்வுரை

இஃது உவமைக்குரியதோர் வேறுபாடுணர்த்துகின்றது. (இ - ள்) உவமையுடன் உவமேயத்திற்கமைந்த பொதுத்தன்மையினைச் சுட்டிக் கூறாத நிலையில் உவமம் வருமாயின் உவமத்தினையும் பொருளினையும் இணைத்துநோக்கி அவ்விரண்டிற்கும்

1. 'உவமவாய்பாடு தோன்ற உவமம் பொருட்குப்புணராக்கண்ணும் உவமைஉள' எனத் திருத்திப் படித்தல் பொருள் விளக்கத்திற்கு ஏற்புடையதாகும். 2. சுட்டிக்கூறவுவமம் என்பது, உவமைக்கும் உவமேயத்திற்கும் பொதுவாகிய ஒப்புமைக்குனத்தினைக குறிப்பிட்டுரைத்தலின்றிப் பவளவாய்' என்றாங்குத் தொகுத்துக் கூறும் உவமம். சுட்டிக் கூறிய உவமமாவது உவமைக்கும் பொருளுக்கும் பொதுவாகிய ஒப்புமைக்குணத்தினைக் குறித்துரைப்பதாய் பவளம்போற் செந்துவர் வாய்' என்றாங்கு விரித்துக்கூறும் உவமம். சுட்டிக்கூற உவமையினைத் தொகையுவமை எனவும் சுட்டிக் கூறும் உவமையினை விரிபுவமையெனவும் குறிப்பிடுவர் தண்டியலங்காரமுடையார் .