பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல் - நூற்பா எ

௩௬

பொதுவாய்ப்பொருந்தியதோர் ஒப்புமைக்குணம் நோக்கி இஃது இன்ன உவமம் என்று துணிந்துகொள்க. (எ-று)

'பவளம்போற் செந்துவர்வாய்’ என்பது, உவமையும் உவமேயமும் ஆகிய அவ்விரண்டிற்கும் உரிய பொதுத்தன்மையினைக் குறித்துக்கூறியுவமஞ்செய்தமையால்சுட்டிக் கூறியவுவமம் எனப்படும். இவ்வாறு உவமையுடன் உவமேயத்திற்கமைந்த ஒப்புத்தன்மையினை குறித்துக்கூறாது 'பவளவாய்’ என்றாற்போன்று வரும் உவமம் சுட்டிக் கூறாவுவமம் எனப்படும். இவ்வாறு உவமைக்கும் பொருளுக்குமிடையே அமைந்த ஒப்புமைத்தன்மையினைச் சுட்டிக் கூறாத நிலையில் உவமம் வருமாயின் அதன் கண் உவமத்தினையும் உவமேயத்தினையும் இணைத்து நோக்கி அவ்விரண்டிற்கும் பொதுவாய்ப் பொருந்தியதோர் ஒப்புமைத் தன்மைபற்றி வினை, பயன், மெய், உரு என்னும் நான்கினுள் இஃது இன்னவுவமையென்று துணிந்துணரப்படும் என்பதாம்.

வாய்க்குப் பவளத்தையுவமையாக்கிப்'பவளவாய்’ என உவமைகூறிய நிலையில் வல்லென்ற பவளத்திகும் மெல்லென்ற உதட்டிற்கும் உள்ள வன்மை மென்மைபற்றி இங்கு உவமை கூறுதல் பொருந்தாது, அவ்விரண்டிலும் அமைந்த செம்மை நிறம் பற்றியே இங்கு உவமஞ் செய்தது என இவ்வாறு ஒப்புநோக்கியறிந்து கொள்ளுதல் வேண்டும் எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் இங்கு நினைக்கத்தகுவதாகும். இங்ங்ணம் வரும் உவமையினைத் தொகையுவமை என்பர் தண்டியலங்காரவாசிரியர்,

இனி, சுட்டிக் கூறாவுவமை என்பது உவமிக்கப்படும் உவமானம் இதுவென உவமவாய்பாடு தோன்றக் குறித்துக் கூறாத நிலையில் வரும் உவமம் எனவும், அவ்வாறு உவமம் வருமாயின் உவமானத்தொடு பொருந்த உவமேயப்பொருளொடு புணர்த்து "அதுபோல" என உவமவாய்பாடு வருவித்துரைக்கப்படும் எனவும் விளக்கந்தருவர் இளம்பூரணர்.

   அகரமுதல் வெழுத்தெல்லாம் ஆதி 
   பகவன் முதற்றேயுலகு                (திருக்குறள். க)

இதன்கண் எழுத்தெல்லாம் அகரமுதல; அதுபோல உலகு ஆதி பகவன் முதற்று’ என்புழி 'அதுபோல’ என உவமை வாய்பாடு வருவித்துரைக்கப்பெறுதல் காண்க. இவ்வாறு வரும் உவமையினை எடுத்துக்காட்டுவமையென்பர் பரிமேலழகர்.