உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனத் தொல்காப்பிய ஆய்வுக் களங்கள் விரிகின்றன. இந்த ஆய்வு மூத்த தமிழுக்கு முதன்மை கொடுத்துச் செய்யப்பட வேண்டிய முக்கியமான ஆய்வு. மெய்யப்பன் ஆய்வகம் மெத்த மகிழ்ச்சியுடன் பேராசிரியர் வெள்ளைவாரணனார் அவர்களின் “தொல்காப்பியம் - நன்னூல் ஒப்பாய்வு” நூலை வெளியிடுகிறது. தொல்காப்பிய ஒப்பிலக்கண ஆய்வில் இது முதல் நூல். பல ஒப்பாய்வுகளுக்கு மூலநூல். ஒப்பிலக்கிய ஆய்வு வளர்ந்ததைப் போல் ஒப்பிலக்கண ஆய்வு இன்னும் வளரவில்லை.

பேராசிரியர் வெள்ளைவாரணனார் குடந்தையை அடுத்த திருநாகேசுவரத்தில் தோன்றிய தமிழ்ச் சான்றோர். சிவநெறிச் செம்மல். இவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தோடு மிகுந்த தொடர்புடையவர்கள்.

நான்காவது தமிழ்ச்சங்கம் எனச் சிறப்பிக்கப்பெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராய் விளங்கி நற்றமிழுக்கு நாளும் தொண்டு செய்தவர்கள். பல்கலைக்கழகப் பேராசிரியர் கட்டிலில் வீற்றிருந்த பெரும்புலவர்களான முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசனார், யாழ்நூல் விபுலானந்தர், மதுரைக் கணக்காயர் நாவலர் சோமசுந்தர பாரதியார், சட்டப்பேரறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை முதலிய பேராசிரியப் பெருமக்களுக்கு உற்ற துணையாய், தமிழ்த் தொண்டராய் வாழ்ந்த தனிச் சிறப்புடையவர்கள்.

தமிழ் ஆராய்ச்சித் துறையில் இவர்கள் பேராசிரியராய் விளங்கியவர்கள். திருமுறை வரலாறு என்னும் மாபெரும் நூலைத் தம் ஆராய்ச்சி மதுகையால் தமிழுக்கு அளித்தார்கள். 2000 பக்கத்திற்கு மேற்பட்ட அந்தப் பெருநூல் 2 தொகுதிகளாக வந்து பல்கலைக்கழக வெளியீட்டுத் துறையைப் பாருக்கு அறிமுகம் செய்தது. வெள்ளைவாரணனாரின் வித்தகப் புலமையைத் தமிழறிஞர்களுக்கு இந்த நூல் அடையாளம் காட்டிற்று. இந்நூல் பரிசினையும் பாராட்டினையும் பெற்றது. திருமுறைக் கலைஞர் என்னும் சிறப்பு விருதினையும் இது இவருக்குப் பெற்றுத்தந்தது. இவர் தம் தமிழ் இலக்கியக் கல்விப் பரப்பையும் திருமுறைப் புலமையையும் வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சித் திறனையும் இந்நூல் வாயிலாக நாம் உணர்கிறோம் தமிழில் எந்த ஒரு தொகை நூலுக்கும் இவ்வளவு விரிவான, விளக்கமான ஆராய்ச்சி வந்ததில்லை. இது உண்மை, வெறும் புகழ்ச்சியன்று.

இவர்கள் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களோடு இணைந்து எழுதி வெளியிட்ட 'திருவருட்பாச் சிந்தனை' என்னும் திருநூலும் இவர்களுக்கு அரசின் முதல் பரிசையும், வள்ளலார் அன்பர்களிடம் மிகுந்த வரவேற்பையும் பெற்றுத்தந்தது.