இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90
தொல்காப்பியம்-நன்னூல்
நின்ற உதானன் என்னுங் காற்றினால் எழுப்பப்படும் ஒலியனுக்கள், மார்பு, கண்டம், உச்சி மூக்கு ஆகிய நான்கிடங் களையும் பொருந்தி, இதழ், நா, பல், அண்ணம் ஆகிய நான்கின் தொழிலால் வெவ்வேறெழுத்துக்களாகிய ஒலிகளாய்த் தோன்றுதலே எழுத்துக்களின் பிறப்பியல்பு என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். இதன் கண் நன்னூலார் உள்ளிருந்து எழும் காற்றால் எழுப்படுகின்ற செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்கு முதற்காரணமாகக் கூறியிருத்தலைக் காணலாம். தொல்காப்பியனார் இவ்வணுத்திரளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. .
எழுத்துக்களை ஒலிக்கும்பொழுது சில எழுத்துக்கள் வாய் முழுதுந் திறத்தலானும், சில எழுத்துக்கள் வாய் சிறிது திறந்துஞ் சிறிது மூடியுத் தொழில் செய்தலானும், சில எழுத்துக்கள் வாய் முழுதும் மூடுதலானும் ஒலிப்பன எனவும், அவை முறையே உயி ரெழுத்துக்களும் இடையெழுத்துக்களும் வல்லின மெல்லினங் களும் ஆமெனவும், ஆய்தவெழுத்தினை ஒலிக்குங்கால் வாய் பெரும்பாலும் மூடியேயிருக்கும் எனவம் அறிஞர் சிலர் கூறுவர்.
இனி அவ்வெழுத்துக்களின் சிறப்புப்பிறவி கூறுகின்றார்.
அவ்வழிப் பன்னி ருயிருந் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும். (தொல், 84,
இஃது உயிரெழுத்துக்களின் சிறப்புப்பிறவி கூறுகின்றது. (இ-ள்) அங்ஙனம் பிறக்குங்கால் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தத்தம் மாத்திரை வேறுபடாதனவாய் மிடற்றின்கண் பொருந்திய காற்றால் ஒலிப்பனவாம், எறு.
பன்னிருயிரும் தம் நிலை திரியா எனவே குற்றியலிகரம் குற்றியலுகரம் என்பன தந்நிலை திரியும் என்பது பெறப்பட்ட தென்பர் உரையாசிரியர்.
தொல்காப்பியனார் மிடற்றுவளியாற் பிறப்பனவாகப் பன்னிரண்டு உயிரெழுத்துக்களை மட்டுங் கூறியிருக்கவும் நன்னூலார் உயிரேயன்றி இடையின மெய்களையும் மிடற்றிற் பிறப்பனவாகக் கொண்டு,
அவ்வழி ஆவி யிடைமை யிடமிட றாகும் மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை. (நன், 75)