உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பியல் 3 91

   எனச் சூத்திரஞ் செய்துள்ளார். உயிரெழுத்தும் இடை யெழுத்தும் ஆகிய இருவகை எழுத்துக்களுக்கும் பிறப்பிடம் கண்டமாகும். மெல்லெழுத்துக்கள் மூக்கையிடமாகப் பொருந்தும். வல்லெழுத்துக்கள் மார்பை யிடமாகப்பெறும் என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். இதன் கண் உயிரெழுத்துக்களுடன் இடையெழுத்துக்களையும் சேர்த்து அவற்றிற்கு இடம் மிடறென்றும் மெல்லினம் மூக்கையிடமாகப் பொருந்துமென்றும் பவணந்தியார் கூறியதற்கு “மெல்லெழுத் தாறும் பிறப்பினாக்கஞ் சொல்லிய பள்ளி நிலையினவாயினும், மூக்கின் வளியிசை யாப்புறத்தோன்றும்” எனவரும் இவ்வியல் 18-ம் நூற்பாவில் மெல்லெழுத்து மூக்குவளியான் இசைக்கும் எனத் தொல்காப்பியரும் யாப்புற என்றதனால் இடை யெழுத்திற்கு மிடற்று வளியும் வல்லெழுத்திற்குத் தலை வளியும் கொள்க’ என இளம்பூரணரும் கூறியன பொருந்திய ஆதார மாகும். வல்லினம் தலை வளியாற் பிறக்கும் என இளம்பூரணர் கூறியிருக்கவும் பவணந்தியார் அதற்கு மாறாக உரம்பெறும் வன்மையென மார்பை யிடமாகக் கூறியுள்ளார். இவ்விருவர் கொள்கைகளுள் ஏற்றுக்கொள்ளத் தகுவதனைத் தேர்ந்து துணிதல் அறிஞர் கடனாகும்.
     அவற்றுள் 
     அஆ வாயிரண் டங்காந் தியலும்.        (தொல், 85)
   இஃது உயிரெழுத்துக்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி கூறுகின்றது.
   (இ-ள்; மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டனுள் அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டும் வாயைத்திறத்தலாகிய முயற்சி யாற் பிறப்பனவாம் எறு.

இவ்விதியினை நன்னூலார்,

      அவற்றுள், 
      முயற்சியுள் அஆ அங்காப் புடைய     (நன்.76) 
   எனவரும் குத்திரத்தால் எடுத்துரைக்கின்றார்.

     இஈ எஏ ஐயென விசைக்கும் 
     அப்பா லைந்து மவற்றோ ரன்ன 
     அவைதாம் 
     அண்பல் முதல்நா விளிம்புற லுடைய, (தொல். 36)

இதுவும் அது.