உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தொல்காப்பியம்-நன்னூல்



     கங்வுஞ் சஞவும் டனவும் முதலிடை 
     நுனிநா வண்ணமுற முறை வருமே. (நன். 79)

என ஒரு சூத்திரத்தால் தொகுத்துக்கூறினார்.

     அண்ணம் நண்ணிய பல்முதன் மருங்கின் 
     நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத் 
     தாமினிது பிறக்குந் தகா நகாரம். (தொல். 93),
   (இ-ள்) அண்ணத்தைச் சேர்ந்த பல்லினது அடியாகிய இடத்தே நாவினது நுனி பரந்து சென்று தன் வடிவு மிகவும் பதியும் படி சேர்தலால், தகரம் நகரம் என்ற இரண் டெழுத்துக்களும் இனிதாகப் பிறக்கும் எறு.
   எல்லாவெழுத்துக்களும் நா முதலியன வடிவு பொருந்த மெய்யுற்றபோதே பிறப்பன என்பார், முன்னர் உறுப்புற்றமைய’ என்றதனோடமையாது ஈண்டும் மெய்யுறவொற்ற என்றார்.
   இச்சூத்திரத்திற்குப் பல்லின் அடியில் தகாரமும் அதன் மருங்கில் நகாரமும் பிறக்கும் என நிரல் நிறைவகையாற்பொருள் கொள்ளினும் பொருந்தும்.
    அண்பல் லடிநா முடியுறத் தந வரும். நன். 80) 
   என்பது நன்னூல். நாவினது நுனியை நாமுடியென இச்சூத்திரத்துப் பவணந்தி முனிவர் வழங்கியுள்ளார்.
     அணரி நுனிநா அண்ணம் ஒற்ற 
     றஃகா னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். (தொல், 94)

   மேற்குத்திரங்களிலெல்லாம் நெடுங்கணக்கு முறைபற்றி எழுத்துக்களின் பிறப்பினைச் சொல்லி வந்த ஆசிரியர், இச்சூத்திர முதலாகப் பின்வரும் ஆறு சூத்திரங்களால் நாவும் அண்ணமுமாகியவற்றின் முதல் இடை. நுனிகளிற் பிறக்கும் நாவதிகாரம் பற்றி எழுத்துக்களுக்குப் பிறப்புக் கூறுகின்றார்.
   (இ-ள்) நாவினது நுனியானது மேல் நோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ றகார ணகாரமாகிய அவ்விரண் டெழுத்துக்களும் பிறப்பன (எ-று).
   அணர்தல்-மேல் நோக்குதல் அனர் என்பதன் அடியாகப் பிறந்த வினையெச்சம் அணரி என்பதாகும். அணர்ந்து பார்த்தல் என்பது மேல்நோக்கிப் பார்த்தல் என்னும் பொருளுடைய தாகும். அச்சொல் இக்காலத்து அண்ணாந்து பார்த்தல் என மருவி வழங்குகிறது.