இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98
தொல்காப்பியம்-நன்னூல்
(இ-ன்) முதலெழுத்துக்களைச் சார்ந்து தோன்றினல்லது தமக்கெனத் தனி நின்றொலிக்கும் இயல்பினையுடையவல்ல வென முன்னர் ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட சார் பெழுத்துக்கள் மூன்றும், தமக்குச் சார்பாகிய முதலெழுத்துக் களது பிறப்பிடத்தோடு பொருந்தித் தமக்கு ஒத்த இடத்தே தமக்குரிய இயல்பில் தோன்றியொலிப்பனவாம் எறு.
எழுத்துக்களின் பிறப்பிடமும் வளியும் ஆகியனவற்றைக் காட்சி யென்றார். ஒத்த காட்சி என்றதனால், ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பேயெனினும் தலைவளியாற் பிறத்தலின் உயிரோடு புணர்ந்த வல்லெழுத்துச் சார்பாகவே பிறக்கு மென்பது கொள்க’ என விளக்கங் கூறுவர் இளம்பூரணர். எனவே சார்பெழுத்துக்கள் தமக்கென வேறிடமுடைய வல்லாதனவாய்த் தமக்குச் சார்பாய் முன்னும் பின்னும் நின்ற முதலெழுத்துக்களின் பிறப்பிடத்தோடு ஒத்த இடங்களிற் பிறக்குமென்பது பெறப்படும்.
இவ்வாறன்றிக் குற்றியலிகரம் குற்றியலுகரம் இரண்டும் தத்தம் சார்பிற் சிவணியியலும் எனவும் இச் சூத்திரத்திற் காட்சி யென்றது நெஞ்சு எனவும் ஏனையென்றது ஆய்தமெனவும் கொண்டு, ஒத்தகாட்சியின் தம்மியல்பு இயலும் என்ற தொடர்க்கு ஒழிந்து நின்ற ஆய்தம் தனக்குப் பொருந்தின நெஞ்சு வளியாற் பிறக்கும் எனப்பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். ஏனை மூன்றும் என்னும் எழுவாய்க்கு இயலும் என்பது பயனிலையாதலானும் ஏனையென்பது ஒழிந்த என்னும் பொருட்டாய் மூன்றென்பதனைத் தொடர்ந்த அடைமொழி யாதலானும் சார்பெழுத்து மூன்றனுள் குற்றியலிகரம் குற்றிய லுகரம் என்னும் இரண்டினையும் முன்னர்ப் பிரித்தபின்னல்லது ஏனையென்ற சொல்லால் மூன்றாவதாகிய ஆய்தத்தைப் பிரித்துரைத்தல் கூடாதாகலானும் இச்சூத்திரத்திற்கு நச்சினார்க் கினியர் கூறிய உரை ஆசிரியர் கருத்திற்கு முரணாதல் துணியப் படும். ஆசிரியர் பவணந்தியாரும் இச்சூத்திரத்திற்கு இளம்பூரண அடிகள் கூறிய உரையினையே யுளங்கொண்டு,
ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய. (நன். 87)
எனச் சார்பெழுத்துக்களின் பிறப்புணர்த்தினார். ஆய்தவெழுத் திற்கு இளம்பூரணர் கூறிய தலைவளியை இடமாக்கி, ஆய்தக்கு இடம் தலை’ என்றும், அவர் கூறாத அங்காத்தலை