பணி ஓய்வுக்குப்பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல் புலத்தில் பேராசிரியராய் வீற்றிருந்து தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் பல இயல்களுக்கு உரைவளம் தொகுத்துப் பெரும்பணி ஆற்றியுள்ளார்கள்.
தமிழகத்தின் பெருமிதமாகிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையின் முதல் தலைவர் பேராசிரியர் வெள்ளைவாரணனார் தான். திருமுறை வரலாறுகள்போல் சைவ சித்தாந்த வரலாறு ஒன்றும் இவர்களால் எழுதப் பெற்றுவந்துள்ளது.
புலமையால் தலைமை பெற்றவர் வெள்ளைவாரணனார். பணி செய்த பல்கலைக்கழகங்களால் பெருமைபெற்றவர். தம் அரிய ஆய்வு நூல்களால் புகழ் பெற்றவர். பேராசிரியப் பெருமக்களின் நட்பால் பேறு பெற்றவர். திருமுறைப் பெருமை உரைத்த இவர்களின் பெருமை விரிப்பின் பெருகும், தொகுப்பின் எஞ்சும்.
இந்நூலில் இரு இலக்கணங்களுக்குமுள்ள சொல் ஒற்றுமை, பொருள் ஒற்றுமை, தொடர் ஒற்றுமை, இலக்கணக் கூறுகளின் வளர்ச்சி, உரையாசிரியர்கள் வழியில் நன்னூலார் பெற்ற இலக்கணக் கொடை, தொன்னூலின் தனிச்சிறப்பு, சின்னூலின் இயல்பு ஆகியன ஒரு குடைக்கீழ் ஒருசேரத் தொகுத்து ஆராயப் பெற்றுள்ளன.
இவ்வாய்வு நூல் வெளியிடும் வாய்ப்பை நூலாசிரியர் மனைவியிடமிருந்து எங்களுக்குப் பெற்றுத் தந்தவர்கள், என் ஆசிரியப் பெருமகன் திருக்குறள் உரை வேற்றுமை ஆசிரியர், முனைவர் சாரங்கபாணி அவர்களும், தொல்காப்பிய எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக்கோட்பாடு ஆகிய பெருநூல்களால் பெரும் புகழ்பெற்ற மொழியியல் அறிஞர், முனைவர் செ.வை. சண்முகம் அவர்களும் ஆவர். அவர்களுக்கு எங்கள் நன்றி.
இன்று தொல்காப்பியக் கல்வியில் மொழியியலார் சிறப்புப் பெறுகின்றனர். வளர்ந்து வரும் மொழியியல் ஆய்வு பற்றியும் தொல்காப்பியம் - நன்னூல் ஒப்பாய்வு பற்றியும் மொழியியல் அறிஞர் செ.வை. சண்முகம் அவர்கள் சிறந்த மதிப்பீடு வழங்கியுள்ளார்கள். அதனைப் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளோம். அதுவும் வாசகர்களுக்கு வழிகாட்டும்.
இன்னும் பல நூற்றாண்டு இந்த நூல் அச்சாலும் அமைப்பாலும் வாழும் என்பது எம் நம்பிக்கை. பெரு முதலீட்டில் பெரு நூல்களை வெளியிடுவதற்கு நிதி ஆதாரங்களை மனமுவந்து அளிக்கும் மெய்யப்பன் ஆய்வக அறங்காவலர் மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களுக்கு நம் நன்றியும் வாழ்த்தும் பாராட்டும் உரியனவாகும்.