உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 113

     தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் 
     மூன்று மொழிமூ விடத்து மாகும். (நன். 154)

எனவரும் நன்னூற் சூத்திரங்கள் புணர்ச்சியின் இலக்கணத் தினை விரித்துரைப்பனவாம்.

   ஆசிரியர் தொல்காப்பியனார் நிறுத்தசொல்லின் ஈறா கெழுத்தொடு, குறித்துவரு கிளவி முதலெழுத்தியைய” என்பத னால், புணர்வன எழுத்தும் எழுத்துமே என்பதனைத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். இங்ஙனம் தொல்காப்பியர் எழுத்தின் தனி திலையும் மொழிக்கண் நிற்குங்கால் அதன் தன்மையும் நேர் முறையில் உணர்த்தினாராகவும், நிலைமொழியும் வருமொழியும் இயல்போடும் விகாரத்தோடும் பொருந்துவது புணர்ச்சி என மொழிமேல் வைத்துக் கூறுவர் பவணந்தி முனிவர். மொழிகள் ஒன்றோடொன்று புணர்வதே புணர்ச்சியிலக்கணமாமெனின் புணர்ச்சியிலக்கணம் சொல்லதிகாரத்திற் சேர்க்கப்பெற்றிருத்தல் வேண்டும். தொல்காப்பியனார் எழுத்திலக்கணம் சொல்லதி காரத்திலும் சொல்லிலக்கணம் எழுத்ததிகாரத்திலும் விரவி மயங்காத படி அவற்றைத் தனித்தனியே பிரித்துணர்த்தினாராத லின், நிலைமொழியும் வருமொழியும் தம்மிற் புணர்வதே புணர்ச்சியென்றல் அவர் நூற்போக்கின் முறைக்கு மாறுபட்ட தாகும். சொற்கள் ஒன்றோடொன்று புணரும் புணர்ச்சியை யுணர்த்துதல் ஆசிரியர் கருத்தாயின், இச் சொல், இச் சொல்லைக்கொண்டு முடியும் என்றாற் போன்று சொல்முடியும் பொருட்டொடர்பும் விரித்துக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாது நிலைமொழி வருமொழிகளை உயிரீறு, உயிர்முதல், மெய்யீறு, மெய்முதல் என எழுத்து வகையால் நான்காகப் பகுத்துக் கொண்டு, நிலைமொழியீற்றுயிர் வருமொழி முதலிலுள்ள உயிரோடும் மெய்யோடும் இயைந்து புணரும் எழுத்துப் புணர்ச்சியை உயிர் மயங்கியல் எனப் பெயர் தந்து அவ்வியலிற் கூறுதலானும், அவ்வாறே நிலைமொழியீற்று மெய்களும் குற்றியலுகரமும் வருமொழி முதலிலுள்ள மெய்யும் உயிருமாகிய எழுத்துக்களோடு புணருமியல்பினை முறையே புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் எனப் பெயர்தந்து கூறுதலானும், அவற்றின் ஈறும் முதலுமாகிய எழுத்துக்கள் தம்மோடு இயைதலால் உண்டாம் நிலையினையே புணரியல் முதலிய இயல்களால் ஆசிரியர் கூறுகின்றமை புலனாம். எழுத்தாற் சொல்லாமாறு கூறும் மொழியாக்கப் பகுதி,