உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 5

 உ-ம். கண் + மீ = மீகண். இல் + முன் - முன்றில்

       எனவரும,
       வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் 
       வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும் 
       எழுத்தே சாரியை யாயிரு பண்பின் 
       ஒழுக்கல் வலிய புணருங் காலை. (தொல். 112)
   இது மேற்கூறிய மொழிபுணரியல்பு நான்கனுள் மிக்குப் புணரும் புணர்ச்சி இத்தன்மைத்தென்பதும், நால்வகைப் புணர்ச்சியும் பொருள்வகையான் அல்வழி வேற்றுமையென இருவகைப்படுமென்பதும் உணர்த்துகின்றது.
   (இ-ள்) சொற்கள் புணருங்காலத்து வேற்றுமைப் பொருளைக் குறித்த புணர்மொழியினது தன்மையும், வேற்றுமை யல்லாத அல்வழியிடத்துப் புணரும் மொழியினது தன்மையும் எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டிலக் கணத்திலும் நடத்தலைத் தமக்கு வலியாகவுடைய எ-று. 

(உ-ம்) விள+கோடு = விளங்கோடு (எழுத்துப் பெற்றது)

          மக+கை-மகவின்கை (சாரியை பெற்றது) 
          அவ்+கோடு-அவற்றுக்கோடு (எழுத்துஞ் சாரியையும்  
                               உடன்பெற்றது) இவை வேற்றுமை. 
          விள+குறிது-விளக்குறிது (எழுத்துப் பெற்றது) 
          பனை+குறை-பனையின் குறை (சாரியை பெற்றது) 
          கலம்+குறை-கலத்துக் குறை (எழுத்துஞ் சாரியையும் 
                   உடன்பெற்றது) இவை அல்வழி. 

     பனையின் குறை-பனை குறைந்தது. கலத்துக் குறை-கலம் குறைந்தது. பனையென்பது ஒரளவு. ‘பனைத்துணையாக் கொள்வர் (திருக்குறள்-104) என்பது காண்க.
     வேற்றுமை யல்லாதது அவ்வழியாதலின் வேற்றுமையை முற்கூறினார். வேற்றுமையாவது ஐ முதலிய ஆறுருபும் இடையே மறைந்தும் விரிந்தும் வரச் சொற்கள் பொருந்தும் தொடர்ச்சி யாம். அவ்வேற்றுமை யுருபுகள் தொக்கும் விரிந்தும் நில்லாத நிலையிற் சொற்கள் புணருந் தொடர்ச்சி அல்வழிப் புணர்ச்சி யெனப்படும். நன்னூலாரும் “மெய்யுயிர் முதலீறா மிரு பதங்களும்.அவ்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி (நன் 15) எனப் புணர்ச்சியைப் பொருள் வேற்றுமையால் அல்வழி வேற்றுமை என இரண்டாக அடக்கினமை முன்னர்க் கூறப்பட்டது.