இளம்பூரணர் உரை ஆதாரமாக இருப்பதும் பல இடங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. சங்கஇலக்கியம், கல்வெட்டுகள் ஆகிய ஆதாரங்களையும் பயன்படுத்தித் தொல்காப்பிய நன்னூல் சூத்திரங்கள் விளக்கப்பட்டுள்ளன. எனவே இலக்கண ஆய்வு பன்முகமாகப் பின்னால் வருவதற்கு இந்த நூல் நல்ல முன்னோடி வழிகாட்டி இந்த ஆசிரியரே தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் என்ற மற்றொரு நூலையும் (1971) எழுதியுள்ளது உள்ஓப்பீட்டு முறையின் சிறப்பை அவர் உணர்ந்துள்ளதைப் புலப்படுத்தும்.
இரண்டு வேறுபட்ட காலத்தில் எழுதப்பட்ட இரண்டு இலக்கண நூல்களின் ஒற்றுமை வேற்றுமைகளுக்குப் பல அடிப்படைகள் இருக்கின்றன. மொழி அமைப்பில் அமைந்துள்ள ஒற்றுமை, இலக்கணக் கோட்பாட்டு ஒற்றுமை, மொழி உணர்வு ஒற்றுமை ஆகியவைகளின் அடிப்படையில் ஒற்றுமைகள் அமையலாம். வேற்றுமைக்குப் பல காரணங்கள் உண்டு. (i) தொல்காப்பியத்தில் பல சூத்திரங்களில் கூறப்பட்டது நன்னூலில் ஒரு சூத்திரத்தில் கூறப்பட்டிருப்பதற்குக் காரணம் நன்னூல் வழிநூல், தொகுத்துக் கூறுதல் அதன் முக்கிய நோக்கம் யாவரும் உணரத் தொகை வகை விரியில் தருக என்பது நன்னூல் - சிறப்புப் பாயிரம்.11-2 என்பதோடு தொல்காப்பியம் ஒரு அமைப்பியல் இலக்கணம் (Structural grammar), பொதுமைப்படுத்திக் கூறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். உதாரணமாக இல்லம்’ என்ற மரப்பெயர் மெல்லெழுத்தில் முடிந்தாலும் மரப் பெயர்கள் புணர்ச்சியில் மகரம் பெறும் என்ற உண்மையை வற்புறுத்துவதற்காக இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே (பு.ம. 18) என்று புணர்ச்சியில் மகரம் பெறும் என்று தொல்காப்பியர் ஒரு சூத்திரம் செய்துள்ளார். அதனால் உரையாசிரியர்கள் அந்தச் சொல்லிலுள்ள மகரம் கெடுவதற்கு விதி அமைக்க வேண்டியவர்களாய்விட்டார்கள். தொல்காப்பியர் இலக்கண விதிகளும் மொழியமைப்பின் பொதுமையை வற்புறுத்துவதாக இருக்கவேண்டும் என்று விரும்புவர். நன்னூல் ஒரு மொழிப் பயிற்சி (Pedagogical) இலக்கணம். விதிகளைத் தொகுத்துக் கூறுவதற்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் கொடுப்பவர். (ii) தொல்காப்பியர் கூறும் சாரியைகளின் வடிவங்களுக்கும் நன்னூலார் கொண்ட சாரியை வடிவங்களுக்கும் வேறுபாட்டுக்குக் (தொல். அக்கு = நன். அ; தொல் இக்கு = நன்கு போன்றவை இருவருடைய அடிநிலைக் கிளவி நிலைமொழி வருமொழியாகக் கொள்ளும் வடிவங்களின் பண்பு பற்றிய வருணனைக் கோட்பாடே காரணம். தொல்காப்பியர் சாரியைகளின் ஒவ்வொரு வடிவமும் தனித்துவம் உடையதாக அதாவது வேறு சொல்லிலிருந்து மாறுபட்ட வடிவம்