உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தொல்காப்பியம்-நன்னூல்



   (உ-ம்) ஆடுஉமகடூஉ என்பன உயர்திணைப் பெயர்கள்.
           ஒன்று, பல என்பன அஃறிணைப் பெயர்கள்.
   விரவுப்பெயர், சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது எனப் புணர்ச்சிக்கண் பெரும்பான்மையும் ஒருதினைப் பாற்படுதலின், அதனையும் இவ்விரண்டனுள் அடக்கிக் கூறினார்.
   அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. (தொல்.118)
   இது மேல் மிக்குவரும் புணர்ச்சியுட் சாரியை வருமிடங் கூறுகின்றது.
   (இ-ள்) மேற் சொல்லப்பட்ட உயர்திணை, அஃறிணை யாகிய இருவகைப் பெயர்களின் பின்னிடத்தே சாரியைச் சொற்கள் வரும் எறு.
   (உ-ம்) ஆடுஉவின்கை, மகடூஉவின்கை, பலவற்றுக்கோடு எனவரும்.
   வேறாகிநின்ற இருமொழியும் தம்மிற் சார்தற் பொருட்டு இயைந்து நிற்பது சாரியை யெனப்படும்.
      அவைதாம் 
     இன்னே வற்றே யத்தே யம்மே 
     ஒன்னே யானே யக்கே யிக்கே 
     அன்னென் கிளவி யுளப்படப் பிறவும் 
     அன்ன வென்ப சாரியை மொழியே. (தொல். 119)
   இது சாரியைகட்குப் பெயரும் முறையும் கூறுகின்றது.
   (இ-ள்) மேற்சொல்லப்பட்ட சாரியைகள்தாம் இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் என ஒன்பதும் பிறவுமாம் எறு.
   ஆன், இன் என்பன சாரியையாயின் வேற்றுமையுருபேற்று

முடிதலும், வேற்றுமையுருபாயின் வேறுருபு ஏலாமையும் தம்முள் வேற்றுமையாம்.

   பிற என்றதனால் தம், நம், தும், உம், ஞான்று, கெழு, ஏ, ஐ என்பனவுங் கொள்ளப்படும். இவற்றுள் ஞான்று ஒழிந்தன ஏழனையும் தொல்காப்பியரே எடுத்தோதலின் இவையும் அவர் காலத்துச் சாரியைகளாக வழங்கப்பெற்றன என்பது பெறப்படும்.