உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தொல்காப்பியம்-நன்னூல்



எல்லாவெழுத்துங் கெடுதலால் இதனை அகரச்சாரியையாகக் கொண்டார் நன்னூலார்.

     அம்மி னிறுதி கசதக் காலைத் 
     தன்மெய் திரிந்து ங், ஞ, ந வாகும். (தொல், 129) 
   இஃது அம்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது.
   (இ-ள்) அம்மினிறுதியாகிய மகரவொற்று, க, ச, த என்பன வருமொழியாக வந்தவிடத்துத் தன் வடிவு திரிந்து ங், ஞ, நக் களாகும் எறு.
   (உ-ம்) புளி+அம்+கோடு = புளியங்கோடு: செதிள், தோல் என வரும்,
   தன்மெய் யென்றதனால் அம்மின் இறுதி மகரமே யன்றித் தம் நம் நும் உம் என்பனவற்றின் இறுதி மகரமும் திரியும் எனக் கொண்டார் உரையாசிரியர்.
   (உ-ம்) எல்லார்தங் கையும், எல்லாநங் கையும், எல்லீர் நுங்கையும், வானவரி வில்லுந் திங்களும் எனவரும்.
   மென்மையும் இடைமையும் வருஉங் காலை 
   இன்மை வேண்டு மென்மனார் புலவர். (தொல். 130) 
   இஃது அம்மீறு இயல்புகணத்தின்முன் கெடுமென்கின்றது.
     (இ-ள்) மென்கணமும் இடைக்கணமும் வருமொழியாய் வருங்காலத்து அம்முச் சாரியையின் இறுதி மகரம் கெட்டு முடிதல் வேண்டுமென்று கூறுவர் புலவர் எ-று.
   (உ-ம்) புளி + அம் ஞெரி = புளியஞெரி எனவரும். இவ்வாறே துதி, முரி, யாழ், வட்டு என்பவற்றையும் ஒட்டிக்காண்க. உரையிற் கோடலால் புளியவிலை என உயிர்வருவழி அம்சாரியையின் மகரம் கெடுதலும் கொள்க என்பர் உரையாசிரியர்.
     இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் 
     கின்னென் சாரியை யின்மை வேண்டும். (தொல்,131) 

இன்சாரியை முழுவதும் கெடுமிடம் கூறுகின்றது.

   (இ-ள்) இன்னென்று சொல்லவரும் வேற்றுமையுருபிற்கு இன்னென்னும் சாரியை இன்றி முடிதல் வேண்டும் எறு.
  (உ-ம்) மலையின் இழிந்தான் எனவரும். பாம்பினிற் கடிது தேள் எனச் சிறுபான்மை இன்சாரியை கெடாது நிற்குமென்பர் உரையாசிரியர்.