பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகைமரபு 133

   இது யகர ஞகர முதன்மொழி வந்தவிடத்து நிகழ்வதோர் கருவி கூறுகின்றது.
   (இ-ள்) ணகார ணகாரமென்னும் புள்ளிகளின் முன்னர் யாவும் ஞாவும் வினைச்சொல்லின்கண் முதலாதற்கு ஒரு தன்மையவென்று கூறுவர் புலவர்.
   (உ-ம் மண் யாத்த, மண் ஞாத்த எனவும், பொன்யாத்த, பொன் ஞாத்த எனவும் யா நின்ற நிலைக்களத்து ஞா போலியாய் வரும்.
  யாவை முற்கூறியவதனான் யா முதன்மொழிக்கண் ஞா வருமென்பர் இளம்பூரணர்.
   இவ்வாறு ணகார ணகார வீற்றுச் சொற்களின் முன்னர் வரும் வருமொழி வினைக்கு முன்னர் யா நின்ற நிலைக்களத்து ஞா நிற்பினும் ஒக்குமென ஆசிரியர் சூத்திரம் செய்தவாறு, நன்னூலார் சூத்திரம் செய்யாதொழிதல், இறந்தது விலக்கல் என்னும் உத்தி என்பர் சங்கர நமச்சிவாயர் நன்னுரல் 24-ம் சூத்திர உரை).
     மொழிமுத லாகும் எல்லா வெழுத்தும் 
     வருவழி நின்ற ஆயிரு புள்ளியும் 
     வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே. (தொல்.147)
   இது ணகார ணகார வீறுகள் அல்வழிக்கண் இயல்பாமாறு கூறுகின்றது.
   (இ-ள்) மொழிக்கு முதலாம் எனப்பட்ட இருபத்திரண் டெழுத்தும் வருமொழியாய் வருமிடத்து நிலைமொழி பீற்றில் நின்ற ணகாரமும் னகாரமும் வேற்றுமையல்லாத அல்வழிக் கண் திரியும் இயல்பில வென்பதாம்.
    மண், பொன் என நிறுத்தி, கடிது, சிறிது, தீது, பெரிது என வன்கணத்தோடும் பிறகனங்களோடும் ஒட்டி இவ்வாறே இயல்பாதல் காண்க.
   நின்ற சொல்முன் இயல்பாகும்மே (144) என்பது வருமொழி பற்றித் திரியாமை கூறியது. இது நிலைமொழி பற்றிய விதியாகும்.
   வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி 
   மேற்கூ றியற்கை ஆவயி னான.   (தொல்.148)