பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தொல்காப்பியம்-நன்னூல்


உம்மையான் இயல்பின்றி முடிவனவும் உள எறு.

   இம்மூன்று சூத்திர விதியினையும் நன்னூலார்,
     பொதுப்பெயர் உயர்தினைப் பெயர்க ளீற்றுமெய் 
     வலிவரின் இயல்பாம், ஆவி யரமுன் 
     வன்மை மிகா,சில விகாரமாம் உயர்திணை. (நன்.159)

என ஒரு சூத்திரத்தாற் கூறினார். இதன்கண் சில விகாரமாம் உயர்திணை என்றது, சூத்திரம் 154ல் கூறிய இகர வீற்றுத்திரிபையும், 153ல் “உயிரீறு புள்ளியிறு” என்றதனால் உயர்தினைப் பெயருள் இயல்பன்றி முடிவனவெல்லாம் கொள்க’ என உரையாசிரியர் காட்டிய விகாரங்களையும் நோக்கியதாகும். -

     புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் 
     வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால் 
     தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின் 
     மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும் 
     அம்முறை யிரண்டும் உரியவை உளவே 
     வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். (தொல்.156)
   இது மேல் உயிரீற்றிற்கும் புள்ளியீற்றிற்கும் வேற்றுமைக்கட் கூறும் முடிபு பெறாது நிற்கும் மூன்றாம் வேற்றுமைத் திரிபு கூறுகின்றது.
   (இ-ள்) புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும், வல்லெழுத்தினது மிகுதி மேற்சொல்லும் முறைமையான் மூன்றாம் வேற்றுமைக்குரிய வினை முதற் பொருளான் உளவாகிய வினைச்சொற்கள் தம் முன்னர்வரின் இயல்பாகலும் உறழத் தோன்றுதலுமாகிய அம்முறையினையுடைய இரு செய்கையும் பெறுதற்குரியனவும் உள; அவற்றை மேலே வேற்றுமைப் பொருட் புணர்ச்சி சொல்லுமிடத்துப் போற்றியறிதல் வேண்டும் எ_று.
   (உ-ம்) நாய் கோட்பட்டான், புலி கோட்பட்டான், சாரப் பட்டான், தீண்டப்பட்டான் இவை இயல்பு. சூர் கோட் பட்டான், சூர்க்கோட்ப்பட்டான் வளிகோட்பட்டான், வளிக் கோட்பட்டான் இவை உறழ்ச்சி. இவற்றுள் தம்மினாகிய தொழிற் சொல்பட்டான் என்பது. கோள் என்பது முதலாக இடைப்பிற வருவன தம் தொழிலாகும்.