இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
140
தொல்காப்பியம்-நன்னூல்
தன்மையே உருபு தொகாதே நிற்றலும், மெய்பிறிதாதலாகிய திரி பின்கண் திரியாது இயற்கையாய் வருதலும், அவைபோல்வன பிறவும், தன்னையே நோக்கித் திரிபு நடக்குமிடத்துப் பொருள் பெற எடுத்தோதப்பட்டு ஏனைவேற்றுமைப் பொருட் புணர்ச்சியது பொதுமுடியினைத் தான் நீக்கி வேறு முடியிற்றாய் நின்று ஒலிக்கும் இரண்டாம் வேற்றுமையது வேறுபட்ட புணர்ச்சி என்று கூறுவர் ஆசிரியர்.
(உ-ம் விளக்குறைத்தான் என்பது, மெல்லெழுத்து மிகுவழி வல்லெழுத்து மிக்கது; மரங் குறைத்தான் என்பது, வல்லெழுத்துமிகுவழி மெல்லெழுத்து மிக்கது; தாய்க்கொலை என்பது, இயல்பாய் வருமிடத்து மிக்கது; பலாக் குறைத்தான் என்பது, பலாஅக் குறைத்தான் என உயிர்மிக வருமிடத்து உயிர் கெட்டது; வண்டு கொணர்ந்தான் என்பது சாரியை யுள்வழிச் சாரியை கெட்டது; வண்டினைக் கொணர்ந்தான் என்பது சாரியை யுள்வழித் தன் உருபுநிலையிற்று, புளி குறைத்தான், புளிக்குறைத்தான், ஆல்குறைத்தான், ஆற்குறைத்தான் என இவை, சாரியை இயற்கை உறழத் தோன்றின; நம்பியைக் கொணர்ந்தான் என்பது, உயர்திணை மருங்கின் உருபுதொகாது விரிந்து வந்தது; கொற்றனைக் கொணர்ந்தான் என்பது. அஃறிணை விரவுப் பெயர்க்கண் அவ்வாறு உருபு விரிந்து வந்தது, மண் கொணர்ந்தான் என்பது மெய் பிறிதாகிடத்து னகரம் டகரமாய்த் திரியாது இயல்பாய் வந்தது.
அன்னபிறவும் என்றதனால் கழிகுறைத்தான், பனை பிளந்தான் என இயல்பாதல் கொள்க. மெய்பெற என்றதனால், மை கொணர்ந்தான்-மைக்கொணர்ந்தான்; வில்கோள்விற்கோள் என உறழ்ந்து முடிவனவும் கொள்க எனவும், இவ்வாறு வேறுபட முடிவது பெரும்பான்மையும் இரண்டாவது வினையொடு முடியும் வழிப்போலும் எனவும், தன்னின முடித்தல் என்பதனால் வரைபாய் வருடை, புலம் புக்கணனே என ஏழாம் வேற்றுமை வினையொடு முடியும் வழித் திரிபும் கொள்க எனவும் கூறுவர் இளம்பூரணர்.
இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும் உயர்தினை யிடத்து விரிந்தும் தொக்கும் விரவுப் பெயரின் விரிந்து நின்றும் அன்ன பிறவு மாகும்ஐ உருபே. (நன். 255)
என்பதனால் இத்திரிபினைக் கூறினார் நன்னூலார்.