இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொகைமரபு 145
‘ஒத்த வென்ப ஏயென் சாரியை என்றதன்றி ஏயென் சாரியை பெற்றே வரும் எனக் கூறாமையின் குறுணி நானாழி எனச் சாரியை பெறாது வருதலுங்கொள்க.
அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றாற் சாரியை இயற்கை. (தொல். 165) இஃது எய்தியது விலக்கிற்று. இ-ள்) அள்வு, நிறை, எண் என்னும் மூவகைச் சொன் முன்னர் வரும் அரை யென்று சொல்லவரும் பொருட்கூற்றை யுணர நின்ற சொல்லிற்கு ஏயென் சாரியை பொருந்துவதன்று.
(உ-ம்) உழக்கரை, தொடியரை, ஒன்றரை எனச் சாரியை பெறாது வந்தமை காண்க.
குறையென் கிளவி முன்வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை. (தொல். 168)
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
(இ-ள்) குறையென்னுஞ் சொல், அளவு முதலியவற்றின் முன்வருங்காலத்து, மேல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்குச் சொல்லும் இயல்பு நிறையத் தோன்றும்.
வேற்றுமை யியற்கை யெனவே இவை வேற்றுமை யன்றென்பது நன்கு புலனாகும்.
(உ-ம்) உரிக்குறை, கலக்குறை, தொடிக்குறை, கொட்குறை, காணிக்குறை, காற் குறை எனவரும்.
முன் என்றதனால் கலப்பயறு எனப் பொருட் பெயரோடு புணரும் வழியும் வேற்றுமை முடிபெய்து மென்றும், நிறைய என்றதனால் கூறு என்ற சொல் வருமொழியாய் வருவழியும் நாழிக்கூறு என வேற்றுமை முடி பெய்து மென்றும் கொள்வர் இளம்பூரணர்.
குற்றிய லுகரக் கின்னே சாரியை. (தொல். 167) இது குற்றுகரவீற்று அளவுப் பெயர், நிறைப் பெயர், எண்ணுப் பெயர்கட்கு வேற்றுமை முடிபு விலக்கி இன்சாரியை வகுக்கின்றது.
(இ-ள்) குற்றியலுகர வீற்று அளவுப்பெயர் முதலியவற்றிற்கு வருஞ் சாரியை இன்சாரியையேயாம் எறு.
(உ-ம்) உழக்கின் குறை, கழஞ்சின் குறை, ஒன்றின் குறை, என வரும்.
தொ.11