இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
148
தொல்காப்பியம்-நன்னூல்
ஒன்றனையறியுஞ் சொல் முன்னர் வரும் யாது என்னும் வினை மொழியிடை வகரவுயிர்மெய் வருதலும் ஆகிய இரண்டும் மரூஉக்களது முடியினிடத்துப் பயின்று வழங்கும் எ-று.
(உ-ம்) அவர் யார் எனவும், அது யாவது எனவும் வரும்.
‘ஒன்றியவகரம்’ என்றதனால் இவ்வகரம் உயிர்மெய் என்பது இனிது புலனாம்.
பயின்று என்றதனால் இச்சொற்கள் யாரவர், யாவதது என வருமொழி நிலைமொழியாகிய ஈரிடத்தும் இம் மரூஉமுடிபினைப் பெறுமெனக் கொள்க.
வேற்றுமை உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின் இஃது உருபியல் என்னும் பெயர்த்தாயிற்று. பெயரும் அதனோடு புணரும் வேற்றுமையுருபும் ஆகிய அவ்விரண்டிற்கும் இடையே வருஞ் சாரியைகள் இவை என்பதும், வேற்றுமை உருயினை ஏற்குங்கால் பெயர்கள் பெறும் இயல்பும் திரிபுமாவன இவை என்பதும் இவ்வியலில் வகுத்து விளக்கப் பெற்றுள்ளன.
அ ஆ உ ஊ ஏ ஒள என்னும்
அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை யுருபிற்கு இன்னே சாரியை. (தொல். 173)
இஃது அகர ஆகார உகர ஊகார ஏகார ஒளகார வீறுகள் உருபினோடு புணருமாறு கூறுகின்றது.
(இ-ள்) அ, ஆ, உ, ஊ, ஏ, ஒள என்று அப்பகுதிப்பட்ட ஆறெழுத்தினையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர் வருகின்ற வேற்றுமையுருபிற்கு இடையே வரும் சாரியை இன் சாரியையே எ-று.
(உ-ம்) விளவினை, பலாவினை, கடுவினை, தழூஉவினை, சேவினை, வெளவினை என வரும். இவ்வாறே ஏனை யுருபுகளையும் ஒட்டுக.
- பல்லவை நுதலிய அகர விறுபெயர்
- வற்றொடு சிவனல் எச்ச மின்றே. (தொல். 174)
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.