இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உருபியல் 151
(இ-ள்) நீயென்னும் ஒரு பெயர் தன்மேல் நெடியதாகிய ஈகாரங் குறுகி இகரமாம், அவ்விடத்து னகரம் ஒற்றாய் வந்து நிற்கும்.
நீ யென்பதே பெயர்; நின் என்பது அதன் திரிபென்பார், நீயென் ஒரு பெயர் என்றார். நீ என்பதன்கண் நகர மெய் முதலாயினும் அம்மெய்யின்மேல் ஈகாரம் ஏறி உயிர்மெய்யென ஒரெழுத்தாய் நின்ற ஒற்றுமை கருதி நகரத்தின்மேல் நின்ற ஈகாரத்தை நெடுமுதல் என்றார். பெயரொடு வேற்றுமை யுருபு புனருங்கால் இடையே சாரியை பெற்று வருதலைக் கூறி வரும் ஆசிரியர், இச்சூத்திரத்தில் னகரம் பெறுதலாகிய எழுத்துப் பேற்றினைக் கூறியது, மூன்றாம் உருபின்கண் சாரியை பெற்றே வந்த அதிகாரத்தை மாற்றுதற் பொருட் டென்பர் உரையாசிரியர்.
(உ-ம்) நின்னை நின்னொடு நினக்கு எனவரும். இத்திரிபினை,
தான் தாம் நாம் முதல் குறுகும், யான் யாம் நீ, நீர், என், எம், நின் நும் ஆம் பிற, குவ்வின் அவ்வரும், நான்காறு இரட்டல. நன். 247)
என்ற சூத்திரத்து நெடுமுதல் குறுகும் மொழிகளோடு சேர்த்துக் கூறினார் நன்னூலார்.
ஒகார விறுதிக் கொன்னே சாரியை. தோல். 180) இஃது ஒகார வீறு இன்னவாறு முடியுமென்கின்றது. இ-ள்) ஒகார வீற்றிற்கு இடைவருஞ்சாரியை ஒன்சாரியை யாகும்.
(உ-ம்) கோஒனை, கோஒனொடு என வரும்.
‘ஒன்றாக நின்ற கோவினை அடர்க்க வந்த எனவும் கோவினை, கோவினொடு, ஒவினை, ஒவினொடு, சோவினை, சோவினொடு எனவும் சிறுபான்மை ஒகார விறுதி இன்சாரியை யும் பெறுமென்பர் நச்சினார்க்கினியர்.
ஒ-மதகுநீர் தாங்கும் பலகை, சோ-மதில்.
அ ஆ வென்னும் மரப்பெயர்க் கிளவிக் கத்தொடுஞ் சிவனும் ஏழன் உருபே. (தொல்.181) இஃது அகர ஆகார வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.