இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழுத்ததிகாரம்
முன்னுரைஇயற்றமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமும் அதனையடிப்படையாக வைத்துக்கொண்டு அதன் வழிநூலாகச் செய்யப்பட்ட நன்னூலுமாகிய இவ்விரு நூலானும் சொல்லப்பட்ட எழுத்திலக்கணத் தொடர்பாகவுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கருதியது இவ்வுரை நூலாகும்.
தமிழ்நாட்டின் தென்பகுதிக்கண்ணதும் புறநானூற்றில் “முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப்பஃறுளி” என நெடியோனென்ற பாண்டியனுக்கு உரிமையாக்கிக் கூறப்பட்டதுமாகிய பஃறுளி யாற்றினையும் அதனையடுத்துப் பலமலையடுக்குகளாற் றொடரப்பட்ட குமரிமலையினையும் தென்பாற் கண்ணதாகிய கடல் மேலுரர்ந்தழிக்க, அக்காலத்து அந்நாட்டையாண்ட பாண்டியன், தன் தென்னாடிழந்த பஃறுளியாற்றிற்கும் குமரிமலைக்கும் ஈடாக, வடநாட்டின் பகுதியாகிய கங்கையாற்றினையும் இமயமலையினையும் வென்று தன்னாட்டுக் குடிகள் வாழத்தந்து அதனால் நீலந்தருதிருவிற் பாண்டியன் என்ற சிறப்புப் பெயர் பெற்றான். இச்செய்தி
‘வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன்’ (காடுகாண் - 18-22)
எனவரும் சிலப்பதிகார அடிகளாலும்,
‘மலிதிரை பூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’
(முல்லைக்கலி 4)
எனவரும் கலித்தொகையாலுந் துணியப்படுகின்றது.
மேற்குறித்த சிறப்புப்பெயர்பெற்ற நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தே அதங்கோட்டாசிரியர் முன்னிலையில் ஆசிரியர் தொல்காப்பியனார் தம்மாற் செய்யப்பட்டுத் தம் பெயராலேயே அமைந்த இத் தொல்காப்பியமென்னும் நூலைக் குற்றமறக் கூறினாரென அவரோடு ஒருங்குகற்ற பனம்பாரனார் செய்த பாயிரங் கூறலால், தொல்காப்பியனாரும் அக்காலத்தவரென்பதும், பஃறுளியாற்றையும் குமரிமலையையும் கடல் கொண்ட பின்னரே இந்நூலைச் செய்தருளினாரென்பதும் நன்கு விளங்கும்.
இந்நூலாசிரியர் அகத்தியனாரின் மாணவர் பன்னிருவருள் முதன்மை பெற்றவரென்பதும், அவராற் செய்யப்பட்ட அகத்தியமென்னும் நூலினை நன்குணர்ந்தவரென்பதும் இவர் தமக்கு வழங்கிய பெயர் ‘தொல்காப்பியன்’ எனபதும்,
‘வீங்கு கடலுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென
வானோரேத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனாப் பெருமை யகத்திய னென்னும்
அருந்தவ முதல்வ னாக்கிய முதனூல்
-