இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயிர் மயங்கியல் 175
கவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும். (நன்.175)
என்பதன் உம்மையாற் றழிஇனார் நன்னூலார், ஆசிரியர் தொல் காப்பியனார் இச்சொற்கு மெல்லெழுத்து மிகுதலை முதன்மை யாகக் கூறி, வல்லெழுத்து மிகுதலைத் தழுவியது போலன்றி, நன்னூலார் வல்லெழுத்து மிகுதலை முதன்மையாகக் கொண்டு மெல்லெழுத்து மிகுதலைச் சிறுபான்மையாகக் கூறியது பிற்கால வழக்கு நோக்கி யென்பது உணரத் தக்கது.
ஊகார வீற்றுள் “பூ என்னும் ஒரு பெயர் உகரம் பெறுதலாகிய அவ்வியல்பினைப் பெறாது மெல்லெழுத்தேனும் வல்லெழுத்தேனும் மிக்கு முடியும். இதனை,
பூவே னொருபெய ராயியல் பின்றே ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. (தொல்.238)
என்ற சூத்திரத்தாற் கூறினர் தொல்காப்பியர்.
(உ-ம்) பூங்கொடி, சோலை, தாமம், பந்து பூக்கொடி, செய்கை, தாமம், பந்து
எனவரும். இவ்விதியை,
பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும். (நன்.200)
என்ற சூத்திரத்தில் பவணந்தி முனிவர் குறித்துள்ளார். ‘வல்லெழுத்து மிகுதலும் என்ற உம்மையால் மெல்லெழுத்து மிகுதலைத் தொல்காப்பியனாரும் மென்மையுந் தோன்றும்’ என்ற உம்மையால் வன்மை மிகுதலை நன்னூலாருந் தழுவினமை காண்க.
4. உயிர்மிக வருதல்
உயிரீற்றின்முன் வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து உயிர்மிக வருதலைக் கூறவந்த தொல்காப்பியர்,
உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி மெய்ம்மை யாக அகரம் மிகுமே. (தொல்,223)
என்பதனால் ஆகார ஈற்று அல்வழிக்கண் அகரம் மிகுமாறு கூறினார்.
(இ-ள்) உம்மை தொக்கு நின்ற இருபெயராகிய தொகைச் சொற்கள் மெய்யாக நிலை மொழி ஈற்றில் அகரம் மிக்கு முடியும் என்பதாம்.
(உ-ம்) உவாஅப் பதினான்கு, இராஅப்பகல் எனவரும்.