உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தொல்காப்பியம்-நன்னூல்



   மெய்ம்மையாக என்பதனான் வல்லெழுத்துக் கொடுக்க எனவும், உம்மை தொக்க என்னாது உம்மை எஞ்சிய என்றதனால் அராஅப்பாம்பு எனப் பண்புத் தொகைக்கும், இராஅக் கொடிது என எழுவாய் முடிபிற்கும் இராஅக்காக்கை எனப் பெயரெச்ச மறைக்கும் அகரப்பேறு கொள்க எனவும், வருமொழி வரையாது கூறினமையால் இயல்புகணத்துக் கண்ணும் அகரப் பேறு கொள்க எனவும் கூறுவர் நச்சினார்க் இனியர்
   (உ-ம்) இறாஅ வதுணங்காய் எனவரும்.
       குறியதன் முன்னரும் ஒரெழுத்து மொழிக்கும் 
       அறியத் தோன்றும் அகரக் கிளவி.      (தொல்,226)

என்பதனால் வேற்றுமைக்கண் ஆகாரவிற்றுப் பெயர் அகர மிகுமாறு கூறுகிறார்.

   (இ-ள்) குற்றெழுத்தின் முன்னின்ற ஆகாரவீற்றிற்கும் ஒரெழுத் தொருமொழியாகிய ஆகாரவீற்றிற்கும் அகரமாகிய எழுத்து அறியத் தோன்றும் என்பதாம்.
   (உ-ம்) பலாஅக்கோடு, செதிள், தோல், பூ எனவும் காஅக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும். இதனால் கூறிய அகரப்பேறு இரா எனக் குறியதன் முன்னர் நின்ற ஆகார வீற்றிற்கு இன்றென்பதனை,
     இராவென் கிளவிக்கு அகர மில்லை. (தொல். 227) 

என்பதனாற் கூறினாராதலின் இவ்வகரப்பேறு இரா என்பதனை யொழித்து ஒழிந்தவற்றிற்கே யுரியதாகும்.

   இவ்வாறே வேற்றுமைக்கண் குற்றெழுத்தின் பின்னின்ற ஊகார வீற்று மொழியும், ஒரெழுத்தொருமொழியாகிய ஊகார வீற்று மொழியும், உகரமாகிய எழுத்துப்பெறும் என்பதனை, 
     குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கும் 
     நிற்றல் வேண்டும் உகரக் கிளவி.              (தொல்,267) 

என்ற சூத்திரத்தால் குறிப்பிட்டுள்ளார்.

   (உ-ம்) உடு.உக்குறை, செய்கை, தலை, புறம் எனவும், தூஉக்குறை, செய்கை, தலை புறம் எனவும் வரும். ஒளகார வீற்றுப்பெயர் அல்வழியினும் வேற்றுமையினும் வல்லெழுத்து வருவழி உகரம் பெறுமென்பதனை,