பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் மயங்கியல் 179

   (உ-ம்: “இறவுப் புறத்தன்ன பினர்படு தடவுமுதல்” என வரும். இதனை நன்னூலார்,
     குறியதன் கீழாக் குறுகலு மதனோ 
     டுகர மேற்றலு மியல்புமாத் தூக்கின். (நன்.172)

என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டுள்ளார்.

7. சாரியை பெறுவன

   முன் உருபியலில் உருபுக்கு வேண்டும் சாரியைப் பேறு கூறிய ஆசிரியர், ஈண்டு உயிரீற்றுப் பொருட் புணர்ச்சியுள் தனித்தனியே சில சொற்களை எடுத்துக்கொண்டு அவற்றிற்கு ஒன்றும் பலவுமாகச் சாரியைகளை விதித்தும் உருபியலிலெடுத் தோதிய சிலவற்றிற்கு அவ்வியல் விதியை மாட்டெறிந்தும் விதி கூறுகிறார்.
      மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை. (தொல். 218)
      அத்தவண் வரினும் வரைநிலை யின்றே. (தொல்.219) 

எனவரும் இரண்டு சூத்திரத்தானும் மக என்னும் அகரவிற்றுப் பெயர் பொருட் புணர்ச்சிக்கண் இன்சாரியை பெறும் என்றும், ஒரோவழி அத்துச் சாரியைவரினும் கடியப்படாதென்றும் கூறினார்.

   (உ-ம்) மக+கை = மகவின் கை, செவி, தலை, புறம் எனவும்; மக+கை = மகத்துக்கை, செவி தலை, புறம் எனவும் வரும்.
     நிலாவென் கிளவி அத்தொடு சிவனும். (தொல்.228) 

என்பதனால், ஆகாரவீற்றுள் நிலாவென்பது அத்துச்சாரியை பெறுமென்றார்.

    (உ-ம்; நிலா+கொண்டான் = நிலாஅத்துக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். ஆ என்னும் சொல் முன்பெற்று நின்ற னகர ஒற்று அகரத்தோடு கூடிநிற்கும் என்பதனை,
   ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே. (தொல்.232) 

எனவரும் சூத்திரத்தாற் கூறினார் ஆசிரியர்.

   (உ-ம்) ஆன நெய் தெளித்து’ எனவரும்.
     பனியென வரூஉங் கால வேற்றுமைக் 
     கத்து மின்னுஞ் சாரியை யாகும். (தொல்,241)