உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் மயங்கியல் 181

என்பதனால் பரணி முதலிய இகர வீற்று நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றும் தொழிற்சொற்கு ஆன்சாரியை யிடையே வந்து முடியுமெனவும்,

     திங்கள் முன்வரின் இக்கே சாரியை. (தொல்,248) 

என்பதனால் திங்களை மாதத்தை யுணர நின்ற ஆடி ஆவணி முதலிய இகர வீற்றுப் பெயர்களின் முன் தொழினிலைக் கிளவி வரின் இக்குச்சாரியை வந்து முடியுமெனவுங் கூறினார். ஆசிரியர் இவ்விதியை,

     திங்களு நாளு முந்துகிளந் தன்ன. (தொல்,286) 

என்ற சூத்திரத்தால் ஆதிரை சித்திரை முதலிய ஐகார வீற்று நாட்பெயர்க்கும் திங்கட்பெயருக்கும் மாட்டெறிந்து கொண்டார்.

பரணியாற் கொண்டான் சென்றான், தந்தான், போயினான்

ஆதிரையாற்கொண்டான், " " "

ஆடிக்குக் கொண்டான், " " "

தைக்குக் கொண்டான், " " "

எனவரும்.

   ஊ வென்னும் பெயர் னகரவொற்றோடு அக்குச்சாரியை பெற்று முடிதலுமுளித்து என்பதனை
       ஊவெ னொருபெயர் னவொடு சிவனும். (தொல்,269) 
  
       அக்கென் சாரியை பெறுதலு முரித்தே 
 
       தக்கவழி யறிதல் வழக்கத் தான. (தொல். 270)

என்பவற்றால் குறிப்பிட்டார்.

   (உ-ம்) ஊ+குறை = ஊன்குறை, செய்கை, தலை, புறம் எனவும் ஊனக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும்.
       ஆடுஉ மகடூஉ வாயிரு பெயர்க்கும் 
       இன்னிடை வரினு மான மில்லை (தொல்.271) 
       பெற்ற மாயின் முற்றவின் வேண்டும். (தொல்.279)
   எனவரும் சூத்திரங்களால் ஆடு உ, மகடூஉ, என்ற ஊகார வீற்றுப் பெயர்களும், பெற்றத்தைக் குறிக்கும் சே என்னும் ஏகாரவீற்றுப் பெயரும் இன்சாரியை பெற்று முடியுமெனக் கூறினார்.