இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயிர் மயங்கியல் 185
அம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே தம்மொற்று மிக-உம் வல்லெழுத் தியற்கை (தொல்.290)
என்ற சூத்திரத்தாற் கூறினார் தொல்காப்பியர்.
(உ-ம்) செரு+களம் = செருவக்களம், சேனை, தானை, படை எனவரும்.
ஐகார வீற்றுள், பனை ஆவிரை என்ற சொற்கள் அம்சாரியை பெறுமிடத்து ஈற்றிலுள்ள ஐகாரம் கெட்டு முடியும் என்பதனை,
பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் நினையுங் காலை அம்மொடு சிவனும் ஐயெ னிறுதி, அரைவரைந்து கெடுமே மெய்யவ னொழிய என்மனார் புலவர், (தொல்.233)
என்ற சூத்திரத்தாலும்,
பனையென்ற சொல்முன் அட்டு என்னுஞ் சொல் வருமிடத்து ஈற்றிலுள்ள ஐகாரங்கெட்டு அவ்விடத்து ஆகாரம் வந்து அம் மெய்மேலேறி முடியும் என்பதனை,
பனையின் முன்னர் அட்டுவரு காலை நிலையின் றாகும் ஐயெ னுயிரே ஆகாரம் வருதல் ஆவயி னான. (தொல்.284)
என்ற சூத்திரத்தாலும் கூறினார் தொல்காப்பியனார்.
கொடிமுன் வரினே யையவ ணிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி. (தோல்.235)
என்பதனால் பனை என்றதன்முன் கொடியென்ற சொல்வரின் இறுதி ஐகாரங் கெடாது நிற்ப வல்லெழுத்து மிக்கு முடியுமென வற்புறுத்தினார்.
(உ-ம்) பனங்காய், செதிள், தோல், பூ
ஆவிரங்கோடு எனவும்
பனாஅட்டு எனவும்
பனைக்கொடி எனவும் வரும்.
இவ்வைகார வீற்றுச் சொற்களின் திரிபினைப் பவணந்தி முனிவர்,
வேற்றுமை யாயி னைகா னிறுமொழி ஈற்றழி வோடும்.அம் மேற்பவு முளவே. (நன்.202)