இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயிர் மயங்கியல் 187
அத்திரிபினையும், அவ்வழி வருமொழி வல்லெழுத்து மிகாது இயல்பாதலையும்,
அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம் தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே, (நன்.173)
என்பதனாற் குறிப்பிட்டார்.
(உ-ம் நாளன்றுபோகி’ எனவரும்.
செய்யுளிடத்துச் சுட்டுப் பெயரீற்று உகரம், அன்று என் பதனோடு புணருமிடத்து ஆகாரமாகத் திரிதலும், ஐயென்பத னோடு புணருமிடத்துக் கெடுதலும் ஆகிய இயல்பிற்று என்பதனை,
அன்று வருகாலை யாவா குதலும் ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும் செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப. (தொல்.258)
என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார்.
(உ-ம்; அதாஅன்றென்ப வெண்பாயாப்பே, இதாஅன் றம்ம, உதாஅன்றம்ம, அதைமற்றம்ம, இதை மற்றம் ம, உதைமற்றம்ம எனவும் வரும்.
இங்ஙனம் அன்று வருமிடத்துச் சுட்டுப் பெயரிற்று உகரம் ஆகாரமாகத் திரியுமெனத் தொல்காப்பியர் கூறியபடி கூறாது, அன்றென்பதன் அகரம் நீண்டு வருமென வருமொழித் திரிபு கூறினார் நன்னூலார்.
அதுமுன் வரும்அன் றான்றாந் தூக்கின், (நன்.180)
என்பது நன்னூல்.
(உ-ம்) அதான்று, எனவரும். நன்னு லார் கருத்துப்படி அது என்பத னுகரம் “முற்றுமற் றொரோவழி” என்பதனாற் கெட்டுத் தகரவொற்றின் மேல் வருமொழி யுயிரேறி முடியும் என்பதாம். இனிச் செய்யுளிடத்துவரும் வேட்கை என்ற ஐகார வீற்றுச் சொல், தனக்கு முன்னர் அவா என்ற சொல் வருமொழியாய் வரப்பெறுமாயின், அவ்வைகாரம் தான் ஊர்ந்து நின்ற மெய் யோடுங்கெட்டு டகாரம் ணகாரமாய்த் திரிந்து முடியுமென்பது,
செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐயெ னிறுதி அவாமுன் வரினே மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் டகார ணகார மாதல் வேண்டும். (தொல்.288)
என்ற சூத்திரத்தாற் கூறப்பட்டது.