இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புள்ளி அங்கியல் 217
இல்லெ னின்மைச் சொற்கை யடைய வன்மை விகற்பமும், ஆகா ரத்தொடு வன்மை யாகலும், இயல்பும் ஆகும். (நன்.233)
என்ற சூத்திரத்தில் நன்னூலாசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார்.
பிறவாறு வருவன
‘ஏழ்’ என்னும் ழகர வீற்று எண்ணுப் பெயர்முன் அளவுப் பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வெண்ணுப் பெயரின் முன்னின்ற ஏகாரமாகிய நெட்டெழுத்து எகரமாகக் குறுகுதலும், நிலைமொழி பீற்று ழகரமெய்யின் பின் உகரம் வருதலும் தொல்லாசிரியன் இருவகை வழக்கிலும் விலக்காது உடன்பட்ட திரிபுகளேயாகும். இவற்றை,
அளவு நிறையும் எண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் கடிநிலை யின்றே ஆசிரியர்க்க. (தொல்.389)
என்ற நூற்பாவில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார்.
(உ-ம்) ஏழ்+கலம் = எழுகலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும், எழுகழுஞ்சு, தொடி, பலம் எனவும், எழு மூன்று, எழு நான்கு எனவும் வரும்.
‘ஏழ்’ என்பதனோடு பத்து’ என்பது வந்து புணருமிடத்துப் ‘பத்து’ என்பதன் இடையிலுள்ள தகர மெய்கெட்டு அவ்விடத்து ஆய்தம் பெற்றுப் பஃது என நிற்றலும் உண்டு. இவ் வருமொழித் திரிபினை,
பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி. (தொல்,390)
எனவரும் சூத்திரத்தாற் குறித்தார்.
(உ-ம்) எழுபஃது எனவரும்,
‘ஏழ்’ என்பதன் முன் ‘ஆயிரம்’ என்னும் எண்ணுப் பெயர் வருமொழியாய் வருமிடத்து முற்கூறியபடி நெடு முதல் குறுகி நின்று, உகரம் பெறாது முடியும் என்பதனை,
ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே, (தொல்.391)
என்பதனால் உணர்த்தினார்.
(உ-ம்) ஏழ் + ஆயிரம் = எழாயிரம் எனவரும்.