உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம்


வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்,
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

குறிப்பு:- பாயிரஞ் செய்வார் தன் ஆசிரியரும் தன்னோடு ஒருங்கு கற்ற ஒருசாலை மாணாக்கரும் தன் மாணாக்கரும் என இவர். அவருள் இந்நூற்குப் பாயிரஞ் செய்தார், தமக்கு (தொல்காப்பியனார்க்கு) ஒருசாலை மாணாக்கராகிய பனம்பாரனார்.

இதன் பொருள்:- வடக்கின்கண் உளதாகிய வேங்கடமலைத் தொடரும் தெற்கின்கண் உளதாகிய குமரியாறும் ஆகிய அவற்றை எல்லையாகவுடைய இடமாகிய தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்கள் வாழும் தமிழ்நிலத்து வழங்கும் உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய அவ் இருகாரணத்தானும் எழுத்திலக்கணத்தினையும் சொல்லிலக்கணத்தினையும் பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்து, செந்தமிழ் மொழியின் இயல்போடு பொருந்திய முன்னைத் தமிழகத்தில் தோன்றி வழங்கும் முந்து நூல்களிற் சொன்ன இலக்கணங்களைக் கண்டு, அவற்றை முறைப்பட ஆராய்ந்து அவ்விலக்கணங்களைத் தொகுத்து ஒரு நூலாகச் செய்தான்; அங்ஙனம் செய்த குற்றமற்ற நூலினை நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையின் கண்ணே, அறமேகூறும் நாவினால் நான்குமறைகளையும் முற்றப்பயின்ற அதங் கோட்டாசான் என்னும் ஆசிரியனுக்குக் குற்றமறத் தெரிவித்து, முன்னை நூல்களிற் போல (இயலும் இசையும் நாடகமும் ஆகிய மூன்று தமிழும்) ஒன்றோடொன்று கலந்து