இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றியலுகரப் புணரியல் 221
(இ-ள்) வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரம் வல்லெழுத்து முதன்மொழியாய் வருமிடத்து இடைப்படிற் குறுகு மென்பதனாற் கூறிய அரைமாத்திரையினுங் குறுகி நிற்கும் இயல்பிலே நிற்றலுமுரித்து எறு.
(உ-ம்) கொக்குக்கடிது, கொக்குக்கடுமை எனவரும்.
“முன்னின்ற சூத்திரத்து உகரம் நிறையுமெனப் பாடமோதி அதற்கு உகரம் அரை மாத்திரையிற் சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி, இச்சூத்திரத்திற்குப் பழைய அரை மாத்திரை பெற்று நிற்குமென்று கூறுவாருமுளர்” எனப் பிறரது உரையினை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டியுள்ளமையை நோக்குங்கால் அவர்க்கது கருத்தன்றென்பது இனிது புலனாம்.
யகரம் வரும்வழி இகரங் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது. (தொல்.410)
இது குற்றியலிகரம் புணர்மொழியகத்து வருமென்கின்றது.
(இ-ள்) ஆறீற்றுக் குற்றியலுகர முன்னரும் யகர முதன் மொழி வருமிடத்து நிலைமொழிக் குற்றுகரவெழுத்து முற்றத் தோன்றாது ஆண்டு ஒர் இகரம் வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும் எறு.
(உ-ம்) நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது குரங்கியாது எனவரும்.
மேற்பொதுவகையாற் குற்றியலுகர வீற்று இயல்பினைக் கூறிய ஆசிரியர், ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் பொருட் பெயரொடு புணரும் புணர்ச்சிக் கூறத்தொடங்கி 411 முதல் 422 வரையுள்ள சூத்திரங்களால் வேற்றுமைப் பொருட் புணர்ச்சி கூறுகின்றார்.
ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. (தொல்.411)
(இ-ள்) ஈரெழுத்தொருமொழிக் குற்றுகரவீறும் உயிர்த் தொடர்மொழிக் குற்று கரவீறும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வருமாயின், இனமாகிய வொற்று (தன்னொற்று) இடையிலே இரட்டிக்க, வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும் என்பதாம்.
(உ-ம்) யாட்டுக்கால், செவி, தலை, புறம் எனவும்
முயிற்றுக்கால், சினை, தலை, புறம் எனவும் வரும்.