உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 223

      இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின் 
      மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை.   (நன்.182) 

என்ற சூத்திரத்துட் கூறிப்போந்தார்.

      வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் 
      வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே 
      மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் 
      வல்லொற் றிறுதி கிளையொற் றாகும்.                (தொல்,414) 
   இது பின்னின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது. வன் றொடர் மொழிக் குற்றுகரவீறும் மென்றொடர்மொழிக் குற்றுகர வீறும் வருமொழி வல்லெழுத்து இடையிலே மிக்குமுடியும். மெல் லொற்றுத் தொடர் மொழிக்கனின்ற மெல்லொற்றெல்லாம் இறுதிக்கட் குற்றியலுகரமேறி நின்ற வல்லொற்றாகவும் அம்மெல் லொற்றின் கிளையாகிய வல்லொற்றாகவும் திரிந்து முடியும்.
   இறுதி வல்லொற்று - குற்றியலுகரமேறிய ஒற்று. கிளை வல்லொற்று - ணகரத்திற்கு டகரமும், னகரத்திற்கு றகரமும் என இவ்வாறு புணர்ச்சியும் பிறப்பும் நோக்கிக் கிளையாய் வருமெழுத்து. 

(உ-ம்) கொக்குக் கால் சிறகு, தலை, புறம் எனவும்

       குரக்குக்கால் செவி, தலை, புறம் எனவும்
       எட்குக் குட்டி செவி, தலை, புறம் எனவும்
       எற்புக்காடு சுரம், தலை, புறம் எனவும் வரும்.
   இங்ஙனம் வேற்றுமைக்கண் மென்றொடர் மொழிக் குற்றுகரத்தின் மெல்லொற்று இறுதி வல்லொற்றாகவும், கிளை வல்லொற்றாகவும் திரிந்து முடியுமெனப் பொதுப்படக்கூறி “மெல்லொற்று வலியா மரப்பெயருமுளவே (எழுத்து 415) என்பதனால் மென்றொடர் மொழி மரப்பெயருள் அங்ஙனம் திரியாதனவுஞ் சிலவுளவென விதந்தார். நன்னூலார் பிற்கால வழக்கு நோக்கி,
       மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையிற்
       றம்மின வன்றொட ராகா மன்னே.                  (நன்.184) 

என்பதனால், மென்றொடர் மொழிக் குற்றுகர வீறுகளுட் சில வேற்றுமைக்கண் தமக்கு இனமான வன்றொடராதலை யொழிந்தன. பெரும்பாலன என விதி கூறினார்.

       மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை.              (தொல்.415)